பெங்களூரில் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இதனால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனையின் உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேடையில் விருந்தினர்கள் பேசிக்கொண்டிருந்த போது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தபடி இருந்த நிலையில் அவர்களிடம் ஜூனியர் என்.டி.ஆர் கடுமையாக நடந்துகொண்டார். ஒரே வார்த்தையில் ரசிகர்களை அவர் அமைதியாக்கிய விதம் பலரால் பாராட்டப்படுகிறது. விஜய் போன்ற பிரபல நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்று ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற விதமாக சில பதிவுகளையும் சமூக வலைதளத்தில் காண முடிகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நேற்று மார்ச் 8 ஆம் தேதி பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றார். ஜூனியர் என்.டி.ஆரை காண எதிர்பார்த்ததை விட பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் திரண்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மருத்துமனையில் எஸ்கலேட்டர் உட்பட உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன. காவல்துறையினரின் இடையீட்டால் இந்த கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பெண்களை மதிக்க வீட்டில் சொல்லிக் கொடுக்க வேண்டும்
நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் ஆண்கள் பெண்களை மதிப்பது குறித்து பேசினார் " பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்திக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு ஆண் பிறக்கும்போதே பெண்ணை மதிக்கக் கூடிய ஒருவனாக தான் பிறக்க வேண்டும். பெண்களின் முக்கியத்துவத்தை எதிர்காலத் தலைமுறை ஆண்களுக்கு பள்ளிகளை சார்ந்திருக்காமல் வீட்டில் இருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டும் . என்னுடைய இரு மகன்கள் பெண்களிடம் மரியாதையாக நடந்துகொள்பவர்களாக உருவாவார்கள் என்பதை நான் உறுதிபடுத்துகிறேன். " என்று ஜூனியர் என்.டி.ஆர் கூறினார்.
ஒரே வார்த்தையில் ரசிகர்களை அடக்கிய ஜூனியர் என்.டி.ஆர்
ஜூனியர் என்.டி.ஆர் மேடையில் பேசிக்கொண்டிருக்கையில் ரசிகர்கள் விசிலடித்து கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது கடுப்பான அவர் அமைதி என்று சொன்னார். அதற்கு ரசிகர்கள் மீண்டும் சத்தம் போடவே தனது அதிருப்தியை வெளிபடுத்தி அமைதி என்று இன்னொரு முறை சொன்னார். அவரது வார்த்தைக்கேற்ப ஒட்டுமொத்த ரசிகர்களும் அமைதியாகினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.