ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் தங்கியிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் (Jr NTR) மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.


ஜப்பான் நிலநடுக்கம்


நேற்று புத்தாண்டு தினத்தன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், 30 பேர் இதுவரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.


மேலும், 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் கட்டடங்கள், சாலைகள் பெரும் சேதமடைந்து பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பான் நாட்டுக்கு விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.


ஜூனியர் என்.டி.ஆர் உருக்கம்


இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பான் நாட்டில் தங்கி இருந்த நடிகர் தான் பாதுகாப்பாக மீண்டும் இந்தியா திரும்பியுள்ளதை உறுதி செய்துள்ளார். 


“ஜப்பானில் இருந்து இன்று இந்தியா திரும்பினேன், அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் முழுவதும் அங்கு தான் கழித்தேன், பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்தால் வருத்தமாக உள்ளது. அந்நாட்டு மக்களின் மன உறுதிக்கு நன்றி. விரைவில் மீண்டு வர வாழ்த்துகள். உறுதியாக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை கடந்த ஒரு வாரத்தை ஜப்பானில் செலவு செய்த ஜூனியர் என்.டி.ஆர், ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியுள்ளது அவரது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக தான் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் பட ப்ரொமோஷன் பணிகளின்போது ஜப்பான் சென்றிருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கு அங்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் 300 நாள்களைக் கடந்து ஜப்பானில் ஓடிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், 2 பில்லியன்களுக்கும் அதிகமான யென்கள் அதாவது இந்திய மதிப்பின்படி 140 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ‘தேவாரா’ திரைப்படத்தின் போஸ்டர் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. நடிகை ஜான்வி கபூர், நடிகர் சைஃப் அலி கான் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், வரும் ஏப்.5ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.