கோலிவுட் சினிமாவில் சோலோ நடன கலைஞராகவும், குழு நடன கலைஞராகவும் இருந்து நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜான் பாபு மாஸ்டர். பெயர் தெரியாத பலருக்கும் இவரது முகம் நிச்சயம் பரீட்சியமானதாக இருக்கும். 90 களில் வெளியான பல முக்கிய நடிகர்களின் படங்களில் முதல் வரிசையில் ஆடிக்கொண்டிருப்பார். மேலும் அந்த காலக்கட்டத்தில் திரைத்துறையில் கோலோச்சிய பல முன்னணி நடன இயக்குநர்களுடன் ஜான் பாபு பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் ரஜினியுடன் தான் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.



”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்

அதில் "நான் ரஜினி சாருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தது இல்லை. ஆனால் ஒரு ஆறு, ஏழு படங்களுக்கு குழுவில் இணைந்து ஆடியிருக்கிறேன். மூன்று முகம் முழுவதுமே நான்தான் பண்ணேன். நான் அவர் நிறைய படங்கள் பண்ணிய பிறகும் உதவி நடன இயக்குநராகத்தான் அவர் படத்திற்கு போனேன். அப்போ பார்த்தாலும் அவர் ஒரு புதுமுக நடிகர் போல மாஸ்டர் பின்னால, கைக்கட்டிக்கொண்டு நிப்பாரு.  நான் சுந்தரம் மாஸ்டர், ரகு மாஸ்டர்க்கிட்ட எல்லாம் வேலை செய்திருக்கிறேன். அவருடைய படங்கள் பண்ணும் பொழுது, அசிஸ்டெண்ட்ஸ்க்கிட்ட கேட்டுப்பாரு. மாஸ்டருக்கு அது தெரியக்கூடாது என சொல்லுவாரு. காரணம் மாஸ்டர் பார்த்தா திட்டுவாங்களாம். அதெல்லாம் நாங்க நினைக்குறது. அதை அவரே சொல்லுவாரு. குழந்தை போல் நடந்துக்கொள்வாரு. பாட்டு போடாமல் , கவுண்ட்லயே சொல்லிக்கொடுக்க சொல்லுவாரு. அவருக்கு எல்லாமே தெரியும் . அவர் என்ன பண்ணாலும் அழகாத்தான் இருக்கும். மறந்துட்டாலும் கூட அழகா ஒரு ஸ்டெப் போட்டுருவாரு. ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரு. ஆனால் மாஸ்டர் சொல்லிக்கொடுத்த நடன அசைவுகளைத்தான் போடனும்னு சொல்லுவாரு. நான் உதவி இயக்குநராக இருந்தாலும் ரொம்ப அன்பா நடந்துப்பாரு.அவர் என்ன பண்ணாலும் சூப்பர்தாங்க. அவர் எல்லாம் தெரியும்னு நடந்துக்க மாட்டாரு. ரொம்ப குழந்தை மாதிரி கற்றுக்கொள்வார். என் பையன் கூட  நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அவர் கிட்ட ரஜினி சார் நினைவு வைத்து நலம் விசாரிச்சுருக்காரு. ” என்றார் நெகிழ்ச்சியுடன் .