லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் நடிக்க வைக்காத காரணத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ரியோ ராஜ்
ரியோ ராஜ்
சன் மியூசிக்கில் ஆர்.ஜேவாக இருந்து, பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகர் ரியோ. இயல்பான சுபாவம் , டைமிங் காமெடி என இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் நிறைய நபர்களை கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரியோ நடித்து சமீபத்தில் திரையரங்கு பின் ஒடிடியில் வெளியான படம் ஜோ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கும் வந்துள்ளன. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது திரைப் பயணம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் ரியோ . அதில் அவர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனால் தான் என்ன வேண்டாம்னு சொன்னாரு..
“லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க என்னை லோகேஷ் கனகராஜ் அழைத்திருந்தார். நான் அப்போது தான் சன் மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்து வந்தேன். பின் லோகேஷ் எனக்கு அழைத்து, தான் அந்த ஷோவை பார்த்து வருவதாகவும், நான் ரொம்ப நன்றாகவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அவர் தெரிவித்தார். மாநகரம் படத்தில் எனக்கு ஒரு சிறிய கதாபாத்திரம்தான் இருப்பதால் இப்போதைக்கு அது வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். முதலில் என்னை நடிக்க சொல்லிவிட்டு இப்போது ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் என்று நான் ரொம்ப உரிமையோடு அவரிடம் கேட்டேன்.
இவ்வளவு சின்ன கதாபாத்திரத்தை எனக்கு அவர் கொடுக்க விரும்பவில்லை என்று பதிலளித்தார். அதற்கு பின் நான் வேறு ஒரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க சென்றேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக வந்த லோகேஷ் கனகராஜ் உங்களுக்கு நடிக்க வரலன்னு நான் வேண்டாம்னு சொல்லல. நீங்க பெரிய கேரக்டர்ல நடிக்கணும்னு தான் வேண்டாம்னு சொன்னேன் என்றார். நான் நடித்து வந்த அந்த படத்தின் இயக்குநரைப் பார்த்து ஏன் இந்த மாதிரி சின்ன கதாபாத்திரத்தை எனக்கு நடிக்க கொடுத்தார் என்று கண்டித்தார்” என்று ரியோ தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் பற்றி ரியோ தெரிவித்துள்ள இந்த தகவல் லோகேஷின் ரசிகர்களை கவர்ந்துள்ளது.