நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால்  ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் இந்தப்படத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 


 






லோகேஷிற்கு மிகவும் பிடித்தமான நடிகர்  மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மேலும் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக  ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிரார். இந்த நிலையில் இந்த கூட்டணியுடன் மற்றொரு இயக்குநரும் இணைந்து பணியாற்றுகிறார் என்பதை ஒரு புகைப்படம் உறுதி செய்திருக்கிறது. ஆம் இந்த கூட்டணியுடன் ஜில் ஜங் ஜக் இயக்குநர் தீரஜ் வைத்தி இணைந்திருப்பதாக தெரிகிறது.


 






இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அவர்,  ‘ஆகச்சிறந்த அனுபவம்’ என பதிவிட்டு இருக்கிறார். தளபதி 67 படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கும் என லோகேஷ் முன்பே கூறியிருந்த நிலையில், விஜயின் ஹியூமர் பக்கம் இந்தப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.