ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 


8 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தில், ரவுடியாக இருக்கும் பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் படம் இயக்குவது கதையாக இருந்தது. இப்படத்துக்காக பாபி சிம்ஹா தேசிய விருது வென்றார். கார்த்திக் சுப்புராஜின் திரைப் பயணத்தில் இப்படம் இன்று வரை மைல்கல்லாக இருந்து வருகிறது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி சுப்பராஜே இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். முதல் பாகத்தின் ஹிட் காம்போவான சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷைனி சாக்கோ, பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 10ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 


அதில், ”பான் இந்தியாவுல இப்பவர சினிமாவுல இவரப்போல ஒரு கருப்பு ஹீரோவ நினைச்சு பாருங்களேன்” என்ற நக்கல் கலந்த குரலும், அதற்கு பதிலளிக்கும் விதமாக ’கருப்பா இருந்தா கேவலமா உனக்கு, தமிழ் சினிமாவுல முதல் கருப்பு ஹீரோ’ ராகவா லாரன்ஸ் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


அதற்கு இடையே சண்டை, துப்பாக்கிச்சூடு ஷீட்டிங் எனப் போகும் காட்சிகளில், “வில்லனுக்கு வில்லன் வில்லாதி வில்லன் எப்பவுமே இருப்பான், இருக்கான்” என எஸ்.ஜே. சூர்யா பேசும் காட்சிகள் வரும்போது வில்லன்களின் இண்ட்ரோ வருகிறது. 


இறுதியாக, ”சுயசரிதையை எப்பொழுதுமே மாற்றி எழுதலாமா என்று ராகவா லாரன்ஸ் கேட்கும் போது, எதையும் புதுசா எழுத முடியாது, எழுதப்பட்டது எழுதப்பட்டது தான்” என எஸ்.ஜே. சூர்யா பதிலளிப்பதும் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் முதல் பாகத்தைப் போன்று நெகட்டிவ் குணத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸின் சுய சரிதையை படமாக எஸ்.ஜே. சூர்யா எடுப்பார் என்பது தெரிய வருகிறது. மேலும், கருப்பா இருந்தா தான் ஹீரோவா, முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 


 



ராகவா லாரன்ஸ் -  எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள இப்படம் முதல் பாகத்தைப் போல் மதுரையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இசையும் இந்த ட்ரெய்லரில் பக்கபலமாக அமைந்துள்ள நிலையில், கார்த்திக் சுப்பாராஜ் - சந்தோஷ் நாராயணன் காம்போவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.