Rajinikanth on Jigarthanda double x: ஜிகர்தண்டா 2 படக்குழுவை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’


சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.  ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். இதனிடையே, ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் Sacnilk தளத்தின் நிலவரப்படி, முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ 2.41 கோடி வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இரண்டாவது நாளில் 4.86 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 7.2 கோடி என மொத்தம் மூன்று நாட்களில் ரூ 14.47 கோடிகளை வசூல் செய்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதனைத் தொடர்ந்து நேற்று நவம்பர் 13 ஆம் தேதி அதிகபட்சமான வசூலை ஈட்டியுள்ளது ஜிகர்தண்டா படம். இந்தியாவில் மட்டுமே ரூ 7.25 கோடி வசூல் செய்துள்ளது.  பெரும்பாலான எதிர்பார்ப்புகள் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் மேல் இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. 


நடிகர் ரஜினி பாராட்டு:


இந்நிலையில், ஜிகர்தண்டா 2 படக்குழுவை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ”ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்.


'லாரன்ஸால்' இப்படியும் நடிக்க முடியுமா.? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது, எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார். திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. 'திலீப் சுப்ராயனின்' சண்டை காட்சிகள் அபாரம்.


"அழ வைச்சிருக்கிறார் கார்த்தி சுப்புராஜ்"


சந்தோஷ் நாராயணன்' வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள்.


நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And Team” என்று நடிகர் ரஜினிகாந்த்  அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.