தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ரவி. அறிமுகமான முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான  ‘எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’, ‘மழை’,‘ சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தாம் தூம்’  ‘ பேராண்மை’,  ‘எங்கேயும் காதல்’ ஆகிய படங்களில் நடித்தவருக்கு ‘தனி ஒருவன்’ படம் கம்-பேக் படமாக அமைந்தது. 






அதன் பின்னர், ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘கோமாளி’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, அல்வா போன்று ‘பொன்னியின் செல்வன்’ பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவின் 50 ஆண்டு கனவாக இருந்து வந்த பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார்.


இந்தப் படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்திருக்கிறது. முதல் பாகத்தில், இடைவேளைக்கு பிறகு இவர் என்ட்ரி கொடுத்தாலும், பலரின் மனதை இவர் ஈர்த்துவிட்டார் என்றே சொல்லலாம்.


அடுத்த வருடம் வெளியாகயிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், ஜெயம் ரவி பல காட்சிகளில் இடம்பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதற்கிடையே ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் படம் வெளியாக இருக்கிறது. 






பொதுவாக ஒரு படம் நல்ல வரவேற்பினையும் அதிக வசூலையும் பெற்றால், அந்த படத்தில் சம்மந்தப்பட்ட ஹீரோவுக்கோ ஹீரோயினுக்கோ இயக்குநருக்கோ மற்றவர்களுக்கோ அவர்களின், தொழில் வளர்ச்சி மேல் ஓங்கி செல்லும். அந்த வகையில் தற்போது, பொன்னியின் செல்வன்  வெளியீட்டிற்கு பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் எகிறியுள்ளது . 


அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்பாகவே பிரபல ஓ டி டி தளம் 30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .