தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவரது மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக குடும்பம் நடத்தி வரும் நிலையில், திடீரென விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவர்களது விவகாரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது.
சமரசப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். ஜெயம் ரவி இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜரானார். நீதிபதி இவர்கள் இருவரையும் இன்றே சமரச மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகரான ஜெயம் ரவிக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான சுஜாதாவிற்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான இவர்கள் இருவரும் கோலிவுட்டின் சிறந்த தம்பதியினராக உலா வந்தனர்.
ஜெயம் ரவி - ஆர்த்தி:
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஜெயம் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படங்களை நீக்கியபோது மேலும் இந்த விவகாரம் வெடித்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்வதாக ஜெயம் ரவி திடீரென அறிக்கை விடுத்தார். இது ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயம் ரவியின் ஆர்த்தி தனது கணவரின் தனிப்பட்ட முடிவு என்றும், தானும் தனது குழந்தைகளும் தவித்து வருவதாகவும் மிகுந்த உருக்கமாக அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து, விவாகரத்து கோரி ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் கணவன் – மனைவி இருவரையும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சமாதானப் பேச்சுவார்த்தை இன்றே நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பது கோலிவுட்டிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.