ஷாருக்கான் வீடு முன்பு நின்று புகைப்படம் எடுத்த நான் 13 ஆண்டுகளுக்கு பிறகு அவரை வைத்து படம் இயக்கியுள்ளேன் என நெகிழ்ச்சியுடன் இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.
ஜவான் ப்ரீ ரிலீஸ்:
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் வரும் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. நயன்தாரா, விஜய்சேதுபதி என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகிறது. இந்த நிலையில், படத்தின் பிரீ ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அட்லீ உள்ளிட்ட படக்குழுவினரும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் அட்லீ, ” இந்த சாய் ராம் கல்லூரியில் விழாவை நடத்துவதற்கு காரணம் இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் சார் தான். அவர் படித்த பள்ளி என்பதால் இங்கு விழாவை நடத்த திட்டமிட்டேன். இதற்கு ஓகே சொன்ன ஷாருக்கான் சாருக்கு நன்றி. இந்த படத்துக்காக நான் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது என் அண்ணன், என்னுடைய தளபதி தான். அவர் தந்த ஊக்கத்தில் தான் இந்த படம் உருவாகி இருக்கிறது.
எந்திரன் படத்தின் ஷீட்டிங்கின் போது மும்பைக்கு சென்றேன். அப்பொழுது ஷாருக்கான் வீட்டை பார்த்த நான் அவரது வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றேன். 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்திற்கு மீண்டும் சென்றேன். இப்பொழுது எனது காருக்கான ஷாருக்கான் வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. உலகத்திற்கே பிடித்த ஷாருக்கான் எனக்காக நின்றிந்தார். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
விஜய்தான் காரணம்:
நமக்கு 8 அல்லது 9 மாதங்களில் படம் எடுத்து தான் பழக்கம். அதே பிளாக் பஸ்டர் படமாக வந்துடும். அதுக்கு காரணம் என்னுடைய தளபதி விஜய் தான். நான் இல்லை. ஆனால், இந்த படத்துக்கு 3 ஆண்டுகள் ஆனது. கொரோனாவால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அதனால், இவ்வளவு நாட்கள் ஆனது. ஆனால், ஜவான் படத்துக்காக எதையும் கொடுக்க தயாராக இருந்தேன். விஜய் சேதிபதி எதை பற்றியும் கவலைப்படமாட்டார். அவர் பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட். அனிருத்தை சந்தித்த போது ஷாருக்கானை வைத்து ஒரு பாடல் வேண்டும் என கேட்டேன். அதற்கு அனிருத், ’இதோ தல சாங்க் பண்ணி தரேன்’ என்றார். அனிருத் எனக்கு பள்ளியிலேயே நண்பன். அதனால் எப்பொழுதும் பாசிடிவாக பேசுவார்.
மனைவி கர்ப்பம்:
என்னுடைய இந்த வெற்றிக்கு என் மனைவி பிரியா தான் காரணம். படத்தின் வேலைக்காக நானும், பிரியாவும் அமெரிக்கா சென்றிருந்தோம். அப்பொழுது பிரியா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதால் 90 நாட்களுக்கு அவர் டிராவல் செய்ய கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், 3 நாட்களில் படப்பிடிப்பை எடுக்க வேண்டும். இது குறித்து ஷாருக்கானிடம் தெரிவித்தேன். உடனே, ஷாருக்கான் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டார். அப்பொழுது, என்னை நான் பார்த்து கொள்கிறேன், நீங்கள் படத்தின் வேலையை பாருங்கள் என பிரியா சொன்னார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். பிரியாவின் ஒத்துழைப்பு தான் எனது வெற்றியின் ரகசியம்.
இந்த தருணத்தில் வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி கவலையில்லை. தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என எப்பொழுதும் முயற்சிப்பேன். விழா குறித்து பேசும்போது ஷாருக்கான் என்னிடம், நான் விழாவுக்கு வரவா என்று கேட்டார். ஏன் என நான் கேட்டதற்கு, ‘நான் வேற மொழி நடிகன் . என்னை தமிழ் மக்களுக்கு தெரியுமா’ என கேட்டார். அதற்கு, நான் நீங்கள் வாருங்கள். உங்கள் மீதான அன்பை நாங்கள் காட்டுகிறோம் என்றேன்” என நெகிழ்ச்சியுடன் அட்லீ பேசியுள்ளார்.