ஜவான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா (Jawan Audio Launch) சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


செப்டெம்பர் 7 ரிலீஸ்


கோலிவுட் டூ பாலிவுட் பெரும் படையுடன் காலடி எடுத்து வைக்கும் இயக்குநர் அட்லீ, தன் முதல் படத்தையே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து எடுத்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.


மேலும் நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் முதன்முதலாக அட்லீ உடன் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க,  யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா


இந்த ஆண்டு பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கின் இரண்டாவது கலக்கல் வெற்றியை எதிர்நோக்கி பாலிவுட்டே காத்துள்ளது.


வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பதான் திரைப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் 'வந்த இடம்', ஹய்யோடா ஆகிய பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் ஜவான் படத்தின் டீசர், ப்ரிவ்யூ ஆகியவையும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


இந்நிலையில் ஷாருக் - அட்லீயின் காம்போவையும், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என கோலிவுட் நட்சத்திரப் பட்டாளத்தையும் காண தென்னிந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விஜய் சர்ப்ரைஸ் தருவாரா?


வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை சென்னையில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், ஷாருக் கான், நயன்தாரா , அட்லீ ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் நடிகர் விஜய் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஷாருக்கானும் விஜய்யும் ஒன்றாக மேடையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், இந்த மொமண்ட் ரீக்ரியேட் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


ஜவான் படத்தின் பிரிவ்யூ எனும் பெயரில் படத்தில் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் மற்றொரு ட்ரெய்லர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.