JanaNayagan Day 1 Box Office Collection: முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளிலேயே, உலகம் முழுவதும் சுமார் 78 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

CM விஜயின் ஜனநாயகன் முதல் நாள் வசூல் நிலவரம்:

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு, ஜனநாயகன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் திருவிழாவை போன்று கொண்டாடினர். தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. இதுபோக இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. விஜயின் அரசியல் பயணத்திற்கான அடித்தளம், செண்டிமெண்ட், கமர்ஷியலான ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவற்றை கொண்டிருந்தாலும், படம் கலவையான விமர்சனங்களையே கொண்டுள்ளது. 3 மணி நேரம் என்பது இந்த கதைக்கு அதிகப்படியான நேரம் எனவும் கருதப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளிலேயே, இந்தியாவில் மட்டும் மொத்தமாக 48.27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

ரூ.78 கோடியை முதல் நாளிலேயே அள்ளிய ஜனநாயகன்:

வாரநாட்களில் வெளியானாலும் விஜயின் கடைசி திரைப்படத்தை முதல் நாளே கண்டுவிட வேண்டும் என்பதில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனை பரபரப்பான டிக்கெட் முன்பதிவு மூலமாக உறுதி செய்ய முடிகிறது. இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டன. அதன் மூலமாக ஒட்டுமொத்தமாக (க்ராஸ்) 48 கோடியே 27 லட்சம் நாடு முழுவதும் வசூல் செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மேலும் ஒரு 30 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அதன்படி முதல் நாளிலேயே ஜனநாயகன் திரைப்படம்சுமார்  78.27 கோடி ரூபாயை வசூலாக பதிவு செய்துள்ளது. அதேநேரம், ஆன்லைன் மூலம் வாங்கிய டிக்கெட்டுகள் அடிப்படையிலான கணக்குகள் மட்டுமே இது என்பதால், முதல் நாள் வசூல் என்பது இதைவிட சற்று அதிகமாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் வசூல் எப்படி?

இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டி முதல் நாளில் ஜனநாயகன் திரைப்படம் 36 கோடியே 50 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம்  முதல் நாளிலேயே சுமார் 38.25 கோடி ரூபாயை வசூலித்ததே, தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் முதல் நாளில் வசூலித்த அதிகபட்ச தொகையாக கூறப்படுகிறது. இதனிடையே ஜனநாயகனின் தெலுங்கு வெர்ஷன் 2 கோடியே 75 லட்சமும், இந்தி வெர்ஷன் ஒரு கோடியே 75 லட்சமும் முதல் நாளிலேயே அள்ளியுள்ளது. தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 68.31 சதவிகிதம் நிரம்பி வழிந்தன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நைட் ஷோக்களில் 73.31 சதவிகிதம் திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. 

இதையும் படியுங்கள்: Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

வசூல் வேட்டை தொடருமா?

இரண்டாவது நாளிற்கான டிக்கெட் முன்பதிவும் ஜரூராக நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதேநேரம், படத்திற்கு A சான்றிதழ் வழங்கியதால் 18 வயதுக்குட்பட்டோர் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் படத்தின் வசூல் சற்றே பாதிக்கப்படலாம்.