மலேசியாவில் நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நேரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

தளபதி திருவிழா (Thalapathy Thiruvizha)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போது தனது கடைசி படம் பற்றி அறிவித்து விட்டார். அவரின் 69வது படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் தான் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் எதிர்பார்ப்பாகவும் அமைந்திருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரம் முன்னதாகவே ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 9ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி திருவிழா என்ற ஹேஸ்டேக்குடன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். 

Continues below advertisement

இசை வெளியீட்டு விழா நேரம்

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் என ஒரு மாதம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள், தவெக தொண்டர்கள் என பலரும் மலேசியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். விஜய், அவரது அம்மா ஷோபனா, இசையமைப்பாளர் அனிருத் போன்றோரும் தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றனர். 

இதனிடையே இசை வெளியீட்டு விழா புக்கிட் ஜலீல் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியானது இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஐந்து முதல் 6 மணி நேரம் வரை நிகழ்ச்சியைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியைக் காண 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. அதனால் இசை வெளியீட்டு விழாவும் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது. எனினும் மைதானத்தில் திரளும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.