ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படம் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ள ஜுனியர் என்.டி.ஆர் உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக, டிசி சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார்.


ஆர்ஆர்ஆர் படத்திற்கு குவியும் பாராட்டு:


ராஜமவுளி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து, சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. இதற்காக அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு திரையிடலுக்குப் பிறகு, பல்வேறு திரைநட்சத்திரங்களும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.


அப்போது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பாருங்கள் என டிசி சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவர் ஜேம்ஸ் கன்னிற்கு இந்தியர் ஒருவர் பரிந்துரைத்து இருந்தார். அதற்கு டிவிட்டரில் பதிலளித்த அவர், அந்த படத்தை தான் ஏற்கனவே பார்த்து விட்டதாகவும், மிகவும் அற்புதமான படம் என்றும் பாராட்டியிருந்தார்.


ஜுனியர் என்.டி.ஆர் உடன் பணியாற்ற விருப்பம்:


இந்நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் ஜுனியர் என்.டி.ஆரின் நடிப்பை ஜேம்ஸ் கன் மிகவும் பாராட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ”ஆர்ஆர்ஆர் படத்தில் மிகவும் நன்றாக நடித்து இருந்தார்... அவருடைய பெயர் என்ன?  கடந்த வருடம் வெளியான பெரிய திரைப்படமான ஆர்ஆர்ஆர்-ல்,  கூண்டிலிருந்து புலிகள் எல்லாம் வெளியே வரும்போது அவற்றுடன் வெளியே வருவாரே அந்த நபர் (ஜூனியர் என்டிஆரைக் குறிப்பிட்டு).


அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் ஆச்சரியமாகவும்,  மிகவும் அருமையாக இருக்கிறது" என கூறினார்.  ஜுனியர் என்.டி.ஆருக்காக ஏதேனும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மனதில் வைத்துள்ளீர்களா என கேட்டபோது, ​​எனக்கு அது தெரியவில்லை. அவருக்கான கதாபாத்திரத்தை நான் தேட வேண்டும். அதற்கு சில காலம் ஆகும்” என ஜேம்ஸ் கன் கூறியுள்ளார்.


ஜேம்ஸ் கன்:


மார்வெல் நிறுவனத்தில் ஏற்கனவே கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தின் இரண்டு பாகங்கள், ஜேம்ஸ் கன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. அதன் தொடர்ச்சியாக கார்டியன்ஸ் படத்தின் இறுதி பாகம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, ஹாலிவுட்டில் மார்வெலுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிறுவனம் டிசி. அந்த நிறுவனத்தின் சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவராக ஜேம்ஸ் கன் பொறுப்பேற்றுள்ளார்.


சூப்பர் மேன், பேட்மேன் மற்றும் வண்டர்-உமன் ஆகிய சூப்பர் ஹீரோக்களை கொண்டு, டிசி சினிமாடிக் யூனிவெர்ஸ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எப்படி பயணிக்க வேண்டும் என்ற மொத்த திட்டத்தையும் ஜேம்ஸ் கன் தான் வகுத்து வருகிறார். இதற்காக பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகளையும் இவர் தான் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில், ஜுனியர் என்.டி.ஆர் உடன் பணியாற்ற விரும்புவதாக ஜேம்ஸ் கன் தெரிவித்து இருப்பது இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.