முந்தைய படங்களில் இருந்து மூன்று கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மட்டுமே, புதிய டிசி யூனிவர்ஸ் படங்களில் நீடிப்பார்கள் என அந்நிறுவன சிஇஒ ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார்.


டிசி-யின் மெகா திட்டம்:


சூப்பர் ஹீரோக்களின் கதை என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது, அமெரிக்காவை சேர்ந்த  மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்கள் தான். காமிக்ஸ் புத்தகங்கள் அடிப்படையில் மார்வெலை காட்டிலும் டிசி நிறுவனம் அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருந்தாலும், 2008ம் ஆண்டு மார்வெல் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட தொடங்கி தற்போது பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால், டிசி நிறுவனமோ திரைப்பட உலகில் தனக்கான நிலையான இடத்தை உருவாக்க முடியாமல் தவித்து வருகிறது. ஸ்னைடர் வெர்ஸ் என ஒன்று தொடங்கப்பட்டாலும், மோசமான நிர்வாக காரணங்களால் அது தோல்வியையே சந்தித்தது. இதனால், பெரும்பாலான படங்கள் தோல்வியையே  சந்தித்தன. 


ஜேம்ஸ் கன் எண்ட்ரீ:


இந்நிலையில் தான் பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகுபிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் டிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கான டிசி திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் அனிமேஷன் சீரிஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து வருகிறார்.  இதற்காக, ஏற்கனவே உள்ள மொத்த டிசி யூனிவர்ஸ் படங்களையும் அவர் ரீபூட் செய்ய உள்ளார். அதாவது ஏற்கனவே வெளியான படங்களில் சூப்பர் மேன், பேட் மேன் மற்றும் வண்டர் உமன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகைகளையும் அவர் வெளியேற்றியுள்ளார். புதிய நடிகர்களை கண்டு டிசி யூனிவர்ஸை மொத்தமாகவே புதியதாக தொடங்க திட்டமிட்டுள்ளார்.


தொடர் தோல்வி:


ஜேம்ஸ் கன்னின் இந்த அறிவிப்பு வெளியான பிறகு, திரைக்கு வந்த அனைத்து டிசி திரைப்படங்களுமே படுதோல்வியை சந்தித்துள்ளன. தி ஃபிளாஷ், ஷசாம் மற்றும் ப்ளூ பீட்டல் ஆகிய திரைப்படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போயின. அடுத்து வர உள்ள தி அக்குவாமேன் திரைப்படமும் அதே நிலையை தான் அடையும் என கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமான நடிகர்கள் கழற்றிவிடப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதோடு, டிசி யூனிவர்ஸ் புதியதாக தொடங்க உள்ளதால், பழைய கதைகளின் தொடர்ச்சியை ஏன் பார்க்க வேண்டும் என்கிற மனநிலையும் இந்த படங்களின் தோல்விக்கு கருதப்படுகிறது.


3 பேருக்கு மட்டும் வாய்ப்பு:


இந்நிலையில், DCEU படங்களில் நடித்த 3 பேர் மட்டும் DCU படங்களிலும் தொடர்வார்கள் என ஜேம்ஸ் கன் அறிவித்துள்ளார். அதன்படி, சூசைட் ஸ்குவாடில் இடம்பெற்ற அமெண்டா வாலர் கதாபாத்திரத்தில் நடித்த, வியோலா டேவிஸ் அதே காத்திப்பரத்தில் தொடர்ந்து நடிக்க உள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற பீஸ் மேக்கர் வெப் சீரிஸில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஜான் சீனா அதே கதாபாத்திரத்தில் புதிய டிசி படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார். அதோடு, அண்மையில் வெளியாகி தோல்வியுற்ற ப்ளூ பீட்டல் படத்தில் நாயகனாக நடித்த, Xolo Mariduena-ம் டிசியின் புதிய படங்களில் தொடர்ந்து நடிப்பார்கள் என ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார்.