Jailer Box Office Collection: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் (Jailer) படம் ஒரு வாரத்தில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 


முன்னதாக பாடல்கள், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த  சரியாக ஹிட்டாகாத நிலையில், கவலையில் இருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் ஜெயிலர் படம் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் வந்தது ரசிகர்களை குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வரவைக்க காரணமாக அமைந்தது. 






இப்படியான நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி நேற்றோடு (ஆகஸ்ட் 16) ஒரு வாரம் நிறைவடைந்தது. இந்த  ஒரு வாரத்தில் இப்படம் ரூ.375.40 அதிகமான கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும், இது மாறலாம் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.