நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தணிக்கை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் மற்றும் 18 விநாடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா உள்ளிட்ட முதல் பாகத்தின் முக்கிய நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சூரஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் 2படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

Continues below advertisement

U/A சான்றிதழ்

ரஜினிகாந்தின் முந்தைய படமான கூலி திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால், இளம் ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு குறைந்தது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பின்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கிடைத்திருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்துவருவதற்கு சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஜெயிலர் 2படத்தின் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாக உள்ளது.