'ஜெயிலர் 2’ படத்துக்கு வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இந்த முறை நடைபெறவில்லை. நேரு உள்விளையாட்டு அரங்கில் மின்சார வசதி கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது

Continues below advertisement

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரஜினி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் சன் பிக்ச்சர்ஸ் தரப்பில் வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்ச் ரத்தா ?

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ‘ஜெயிலர் 2 ரேவ்’ என்ற இசை நிகழ்ச்சியை சன் பிக்சர்ஸ் நடத்துகிறது. அனிருத் இசையமைத்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் முழு ஆல்பமும் இந்த நிகழ்ச்சியில் வெளியாக உள்ளது. இதுவரை படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் முன்னதாக வெளியன டிசி படத்திற்கும் இதே போன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. 

Continues below advertisement

நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏன் இல்லை

பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இசையைத் தாண்டியும் இருக்கும். குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய ‘காக்கா - கழுகு’ கதை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதுபோன்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா பொதுவாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். ஆனால் இந்த முறை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை நடத்துவதற்குத் தேவையான மின்சார வசதி கிடைக்காததால் வழக்கமான இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

ரஜினி கலந்துகொள்வாரா?

இதனிடையே ஜெயிலர் 2 ரேவ் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வது சந்தேகமாகவே உள்ளது. காரணம். ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கும்  ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்புக்காக மைசூரில் இருக்கிறார். தர்மன் இறுதிகட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்து வருவதால் ரஜினி கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 

ஆடியோ லாஞ்ச் நடத்தாமல் தோல்வியடைந்த படங்கள் 

சன் பிக்சர்ஸ் இதற்கு முன்பு ரஜினியின் ‘அண்ணாத்த’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களுக்கும் வழக்கமான இசை வெளியீட்டு விழாவை நடத்தவில்லை. அந்த இரு படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தன.  இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்துக்கும் ஆடியோ லாஞ்ச் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க குழப்பத்தை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.