2021ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழ் சினிமாவை பொறுத்தவரை பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ‘ஜெய் பீம்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’, சமுத்திரக்கனி இயக்கிய ‘விநோதய சித்தம்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல் வெளியானது.


அரசியல் தான் காரணமா


இந்நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வெற்றிபெற்ற இந்தத் திரைப்படங்கள் எதுவும் தேசிய விருது வெல்லாதது, தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மற்ற மொழிகளைக் காட்டிலும் சிறந்த திரைப்படங்களாக அமைந்து இந்தப் படங்கள் பாராட்டுகளை பெற்ற போதும், அவை தேர்வு செய்யப்படாததற்கு காரணம், இந்தப் படங்கள் பேசிய அரசியல் தானா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 






ஜெய் பீம்






த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம், பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  நீதிபதி சந்துருவின் வாழ்க்கையை மையமாக வைத்து சமூகநீதியை பேசிய இந்தப் படத்திற்கு ஒரு பிரிவின் கீழும் விருது கிடைக்கவில்லை என்பதை ரசிகர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.


சார்பட்டா பரம்பரை






இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சர்வதேச திரைப்படம் விழாக்களில் விருதுகளை அள்ளிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்திற்கும் எந்த பிரிவின் கீழும் விருது வழங்கப்படவில்லை. சிறப்பான ஸ்போஸ்ட்ஸ் டிராமாவாக எடுக்கப்பட்ட இந்தப் படம், நல்ல கதைக்களத்தையும் அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான ஒரு படைப்பாக இருந்தும் ஒரு விருதை கூட வாங்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் ரசிகர்கள்.


கர்ணன்


 






மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக கர்ணன் திரைப்படம் விருதுகளில் பரிந்துரையில் இருந்தபோதிலும் எந்த பிரிவின் கீழும் விருது பெறவில்லை.


பிற மொழிகளில் வெளியான படங்களைக் காட்டிலும் சமூக நீதியை மையமாக பேசும் படங்கள் தமிழில் அதிகம் இருந்து ஒரு படம் கூட விருது பெறாதது, இந்தப் படங்களில் இருக்கும் அரசியலை புறக்கணிப்பதாக இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.