சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. படத்தின் போஸ்டர், பாடல்கள், டீசர் வெளியாகிய நிலையில் இன்று அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான பாடல்கள், டீசர்களில் ரஜினிகாந்த் மட்டுமே பிரதானமாக காட்சியளித்த நிலையில் இந்த பாடலில் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களும் காட்டப்பட்டுள்ளது.


குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மூலம் இது ஒரு பழிவாங்கும் படலம் என்று யூகங்கள் வெளியானது. தற்போது வெளியாகியுள்ள மருதாணி பாடல் மூலம் அண்ணாத்த படத்தின் கதை இதுதான் என்று யூகங்கள் வெளியாகியுள்ளது.




மருதாணி பாடலில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சடங்குகள் கீர்த்தி சுரேஷிற்கு நடத்தப்படுகிறது. அதற்கேற்றாற்போல “மணமேடை நெனப்பு, மாமன் மாலக்கொண்டு வர்றான், தாலி சூடப்போறா, அட்சத, அட்சத தூவ” உள்ளிட்ட வரிகள் இது திருமண நிகழ்வு என்பதை உறுதி செய்கிறது.


அந்த காட்சியில் மணமகள் தோற்றத்தில் காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷிற்கு திருமண சடங்குகளை குஷ்புவும், மீனாவும் செய்கின்றனர். பாடலில் ஒரு காட்சியில் குஷ்பு கீர்த்தி சுரேஷை வாஞ்சையாக கொஞ்சுகிறார். இதனால், படத்தில் குஷ்புவின் மகளாகவே கீர்த்தி சுரேஷ் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.




கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக நடிகர் ரஜினிகாந்த் சீர்வரிசைகளுடன் பங்கேற்பது போலவும், ஒரு காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷின் தலையில் தனது கையை வைத்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், குஷ்பு மற்றும் மீனா ஆகியோருக்கு சகோதரனாக ரஜினிகாந்த் நடித்துள்ளாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்திற்கு ஜோடி நயன்தாராதான் என்பதை “சாரல், சாரல் காற்றே” பாடல் மூலம் உறுதி செய்யப்பட்டதால், ரஜினிகாந்தின் சகோதரிகளாக குஷ்பு, மீனா இருப்பதற்கு வாய்ப்புகள் தாராளமாகவே உள்ளது.




அதற்கேற்றார்போல, மருதாணி பாடலில் நடிகர் ரஜினிகாந்த் நடுவில் ஆட அவர்களுக்கு ஒருபுறம் மீனாவும், மறுபுறம் குஷ்புவும் நடனம் ஆடுகின்றனர். அவர்களில் குஷ்புவிற்கு அருகில் பாண்டியராஜனும், மீனாவிற்கு அருகில் லிவிங்ஸ்டனும் நடனம் ஆடுகின்றனர். இதனால், அண்ணாத்த படத்தில் குஷ்புவிற்கு ஜோடியாக பாண்டியராஜனும், மீனாவிற்கு ஜோடியாக லிவிங்ஸ்டனும் நடிக்கின்றனர் என்று எதிர்பார்க்கலாம்.


படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு கோலகலமாக நடத்தப்படும் திருமணத்திற்கு பின்புதான் படத்தின் திருப்புமுனை காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்தின் டீசரில் ரஜினிகாந்த் பேசும் “கிராமத்தான குணமாத்தானே பாத்துருக்க… கோபப்பட்டு பாத்ததில்லேயே” என்ற வசனத்தை பொருத்திப் பார்த்தால் படம் அண்ணாத்த படத்தின் திரைக்கதை கீர்த்தி சுரேஷை மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.




கிராமத்தில் இருந்து திருமணம் முடிந்து கொல்கத்தாவிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷிற்கு நேரும் இன்னல்களுக்கு பழி தீர்ப்பதற்காகவோ, அல்லது அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கிராமத்தில் இருந்து கொல்கத்தா சென்று ரஜினிகாந்த் பழிவாங்கும் விதத்தில் கமர்ஷியலாக சிவா இந்த படத்தை இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


சிவா இதற்கு முன்னர் இயக்கிய வீரம் படத்தில் அண்ணன்-தம்பி பாசம், வேதாளம் படத்தில் அண்ணன் – தங்கை பாசம், விவேகம் படத்தில் கணவன் – மனைவி பாசம், விஸ்வாசம் படத்தில் தந்தை – மகள் பாசம் ஆகியவையே கதையின் மையக்கருவாக இருந்தது. இதனால், அண்ணாத்த தாய்மாமன் உறவின் உன்னதத்தை எடுத்துச் சொல்லும் படமாக அமைவதற்கும் வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. அரசியலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறியபிறகு அவரது நடிப்பில் வெளியாகும் முதல் படம் அண்ணாத்த என்பதால், படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண