ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் ப்ரொமோஷனுக்காக ரூ.80 கோடி செலவிடப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக, இயக்குனர் ராஜமௌலியின் மகன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, ப்ரமோஷனுக்காக ரூ.80 கோடி செலவு செய்யவில்லை எனவும், வெறும் ரூ.8.5 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர்:
உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்தது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர். இப்படியாக இந்தியாவுக்கு நேரடியாக பெருமை சேர்ந்த தருணத்தில் அந்தப் படத்தின் இயக்குநருக்கே இலவச அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை.
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ஆர்ஆர்ஆர் குழு:
இலவச அனுமதி கிடைக்காததால் ஆஸ்கர் விழாவில் ராஜமௌலி அவரது மனைவி ரமா ராஜமௌலி, அவர்களது மகன், மருமகள், நடிகர் ராம் சரண் அவரது மனைவி, நடிகர் ஜூனியர் என்டிஆர் அவரது மனைவி என அனைவருமே தனித்தனியாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி விழாவை நேரில் பார்த்தனர். அவ்வாறு அவர்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும், சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20.6 லட்சம் என தகவல் வெளியானது. அதோடு, அமெரிக்காவின் குறிப்பிட்ட சில நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் மற்றும் படத்தின் ப்ரமோஷன் பணிக்காக ரூ.80 கோடி வரையில் படக்குழு செலவிட்டதாகவும் தகவல் வெளியானது.
டிக்கெட் விலை ரூ.20.6 லட்சமா?
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரமோஷனுக்காக செலவு செய்தது எவ்வளவு என்பது குறித்து, இயக்குனர் ராஜமௌலியின் மகனும், ஆஸ்கர் விருதை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டவருமான கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை படக்குழு விலைக்கு வாங்கியது உண்மை தான். ஆனால் சமூக வலைதலங்களில் பரவி வரும் அளவிற்கு விலை கிடையாது. எம்எம் கீரவாணி, சந்திர போஸ், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கால பைரவா, ராகுல் சிப்ளிங்குஞ்ச் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தது. ஆனாலும், அகாடெமி விதிகளின் படி, விருது பெற்றவருக்கும், ஒரு குடும்ப உறுப்பினருக்கும் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பாஸ் வழங்கப்பட்டது. இதன் காரணமாக படக்குழுவை சேர்ந்த மற்ற நபர்கள், டிக்கெட்டுகளை வாங்கினோம். அவற்றின் விலை ஒரு நபருக்கு 700 முதல் 1500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 57 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1.2 லட்சம் வரை மட்டுமே” என கூறினார்.
ரூ.80 கோடி செலவு செய்தோமா?
”அதேபோன்று பட ப்ரமோஷனுக்காக 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையில் ரூ.5 கோடியில் ப்ரமோஷன் பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் ரூ.8.5 கோடி வரை செலவானது” எனவும் கார்த்திகேயா விளக்கமளித்துள்ளர்.