கூலி விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஃப்ளாப் கொடுக்காத இயக்குநராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெற்றது. அந்த வகையில் கூலி படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே வழங்கி வருகிறார்கள் . லோகேஷ் கனகராஜின் வெற்றிப் பயணம் தொடருமா? அல்லது தனது முதல் தோல்வியை சந்திக்க இருக்கிறாரா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
தொடருமா லோகேஷின் வெற்றிப்பயணம் ?
லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைப் போல கூலி படத்திலும் அவரது தனித்துவமான டச் இருக்கவே செய்கின்றன. ரஜினிக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டைட்டில் கார்டு. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பது , இடைவேளைக் காட்சியில் விண்டேஜ் பாடல் வைத்து முடிப்பது என தனது தனித்துவமான அடையாளத்தை படத்தில் வைத்துள்ளார். நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அனிருத் காட்சிகளை தனது இசையால் உயர்த்துகிறார். ஆனால் கதையைப் பொறுத்தவரை படம் மிக வழக்கமான திருப்பங்களுடன் செல்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் குறைவான சுவாரஸ்யத்துடன் கூலி படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்
முதல் தோல்வியா ?
கூலி படத்திற்கு திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. இதனால் முதல் காட்சியின் விமர்சனங்களை வைத்து படம் வெற்றியா தோல்வியா என்பதை தீர்மாணிக்க முடியாது. மேலும் ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்த பின்னரே அதை சொல்ல முடியும். மேலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது படத்தின் வசூல்தான். கூலி படத்தைப் பொறுத்தவரை அதற்கு வசூல் ரீதியாக மிக சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்த ஓப்பனிங்கை படம் அடுத்தடுத்த நாட்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.