முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்திலும் பரபரப்பான திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். 

Continues below advertisement

முன்னணி இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் , ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணைச் சுற்றி பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீளும் காட்சி, இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கதையின் விசாரணைத் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. ‘இறுதிபக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், படம் ஒரு புதிய ரத்தம் தோய்ந்த மர்மம் மற்றும் பரபரப்பான திரில்லர் களத்தை கையில் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

Continues below advertisement

‘இறுதிப்பக்கம்’ திரைப்படம் மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய எமோஷனல் திரில்லராக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகமான ‘இறுதிப்பக்கம் 2’வும் அதேபோன்று பரபரப்பான திரில்லர் களத்தில் உருவாகியுள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக மட்டுமின்றி, புதிய கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மையக் கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பு தீவிரமாகத் தேடுகிறது. அதே நேரத்தில், கொலையைச் செய்தவர்கள் தங்களுடைய குற்றம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அதை மறைக்க மற்றொரு தரப்பு முயற்சி செய்கிறது. இவ்வாறு, கொலையை கண்டுபிடிக்க முயலும் ஒரு தரப்புக்கும், அதை மறைக்க முயலும் மற்றொரு தரப்புக்கும் இடையே நடைபெறும் ஆடு–புலி ஆட்டமே இப்படத்தின் திரில்லர் பயணமாக அமைந்துள்ளது.

இந்த விசாரணைப் பயணத்துடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் இணைத்து, எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது. ‘இறுதிப்பக்கம்’ படத்தில் இருந்த திரில்லர் அனுபவத்தைப் போலவே, ரசிகர்களை தொடக்கம் முதல் இறுதிவரை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

சென்னை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின் களம் நகரும் பகுதிகளின் இயல்பான சூழலைத் திரையில் பதிவு செய்யும் வகையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.