சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில் நடக்கும் ஆட்டத்தில் இந்திப் பாடல்களுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


ஐ.பி.எல் தொடக்கவிழா


ஐ.பி.எல் 17 ஆவது சீசன் இன்று மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் இரவு 8 மணியளவில் தொடங்குகிறது. ஐ.பி.எல் 17 ஆவது சீசனைத் தொடங்கி வைக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


ஆயிரக்கணக்கான பெங்களூர் மற்றும் சென்னை ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டத்தை காண கூடி இருக்கிறார்கள். அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் இந்த துவக்க விழாவில் திட்டமிடப் பட்டிருந்தது. 


தேச பற்றைத் தூண்டிய அக்‌ஷய் குமார்


ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு முன்பாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்கள். தேசியக் கொடியை ஏந்தியபடி அவர்கள் மைதானத்தில் வலம் வந்தனர். வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார களமாகவும் இந்த ஐ.பி.எல் போட்டி பயன்படுத்தப்படுகிறது. 


இந்திப் பாடல்களால் கடுப்பான ரசிகர்கள்






இவர்களைத் தொடர்ந்து ரஹ்மானின் இசை நிகழ்ச்சித் தொடங்கியது. இந்திப் பாடகர் சோனு நிகம் ரஹ்மானுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருவரும் சேர்ந்து ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலை இந்தியில் பாடினார்கள். தொடர்ந்து இந்தியில் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் மட்டுமே அடுத்தடுத்து . மேடையில் ஒலித்தன.


சென்னை அணியைச் சேர்ந்த மகேந்திர சிங் தோனிக்காக பத்து தல படத்தில் இருந்து ஒரு பாடலை ரஹ்மான் பாடினார். இதனைத் தவிர்த்து பெரும்பாலும் இந்திப் பாடல்களையே ரஹ்மான் பாடியதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி  தெரிவித்து வருகிறார்கள். சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையில் நடக்கும் போட்டியில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிப் பாடல்கள் இல்லாமல் இந்திப் பாடல்களை ஏன் பாடவேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.