வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தனது முதல் படத்திற்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அஸ்வத் தெரிவித்துள்ளார்.


இன்ஸ்பெக்டர் ரிஷி


அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ஆர் வெங்கடேசன் இயக்கிய நளனும் நந்தினியும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ’ திட்டம் போட்டு திருடுற கூட்டம் ‘ விஷ்ணு விஷால் நடித்து வெளியான எஃப்.ஐ.ஆர் படத்திற்கு இசையமைத்துள்ளார். சினிமா தவிர்த்து விளம்பரங்களுக்கும் இசையமைத்து வரும் அஸ்வத் பகுதி நேரமாக ஆசிரியராகவும் இருந்து வருகிறார் இசையமைப்பாளராக தனது பயணப் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் அஸ்வத்.


வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்


" சின்ன வயதில் இருந்தே எனக்கு இசைமீது ஆர்வம் இருந்தது. அப்போதே நான் கீர்போர்டு வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா படித்தேன். அங்கு சிதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் எனக்கு சீனியராக இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து காலேஜ் இசைக்குழுவில் வாசித்திருக்கிறோம். அதற்கு பிறகு அவர் முழு நேரமாக இசையமைக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு அப்போது இசையமைப்பாளர் ஆவதற்கு முழு நம்பிக்கை வரவில்லை. எனக்கு அப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்தன. கல்லூரி படிக்கும்போதே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் உதவியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் செல்லவில்லை.  நியூஸ் சானல் ஒன்றில் செய்தி தயாரிப்பாளராக வேலை செய்தேன்.


செய்திகளுக்கு நானே இசையமைத்திருக்கிறேன். அதற்கு பிறகுதான் சினிமா பயணம் தொடங்கியது. திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒருவருடன் தொடர்பு கிடைத்தது, அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இயக்கிய நளனும் நந்தினியும் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படம் பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனால் படத்தின் என்னுடைய இசையைப் பார்த்து நிறையபேர் கவனித்து பாராட்டினார்கள். முதல் படத்திலேயே ஷங்கர் மகாதேவன் , ஷ்ரேயா கோஷல் போன்ற பெரிய பாடகர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.  நான் அப்போது செய்துகொண்டிருந்த செய்தி தயாரிப்பாளர் வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்”


ரிங்க்டோன் கூட நான் தான் உருவாக்கினேன்


இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் குறித்து பேசியபோது “ இன்ஸ்பெக்டர் ரிஷிக்கு வழக்காமாக ஹாரர் சீரிஸின் வருவது போன்ற இசையை தவிர்க்க நினைத்தோம் . இதனால் எதை எல்லாம்  செய்ய கூடாது என்று முதலில் திட்டமிட்டோம். அடுத்தபடியாக இந்த கதைக்கான ஒரு உலகத்தை உருவாக்க நினைத்தோம். இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் செல்ஃபோனில் அடிக்கும் ரிங்க்டோன் கூட நான் இசையமைத்து தான்” என்று அஸ்வது கூறியுள்ளார்.