இரண்டு வகையான இயக்குநர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் பிடித்த ஒன்றை படமாக்கி வெற்றிபெறுபவர்கள் ஒரு வகை. தனக்கு பிடித்த ஒன்றை படமாக்கி அதை எல்லாருக்கும் பிடித்த ஒன்றாக மாற்றி வெற்றிபெறுபவர்கள்..


இயக்குநர் ஷங்கர் தனது உதவி இயக்குநர் வசந்தபாலனிடம் சொன்னது இது.


ஷங்கர்


1993-ஆம் வருடம் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் சங்கர் இன்று தனது 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனது ஒவ்வொரு படங்த்திலும் தனது தேடலை பெரிதாக்கிக் கொண்டே இருப்பவர் ஷங்கர். அவரது இந்தப் பயனத்தின் சில விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் சினிமாவை தொழில் நுட்பரீதியாக நவீனப்படுத்தியதற்கும் அதன் வணிகத்தை பெரிதாக்கியதற்கு ஷங்கரின் பங்கு மிகப்பெரிது. எந்த வகைகளில் என்று பார்க்கலாம்


உள்ளூரில் ஹாலிவுட் சினிமா


இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று ஷங்கரை குறிப்பிடுவது வழக்கம். ஹாலிவுட்டின் மிகப்பெரிய பிரமாண்டமான படம் டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூனின் பெயர் சினிமா வளர்ச்சியடைந்த உலகத்தின் அத்தனை நாடுகளுக்கும் போய் சேர்ந்தது. ஹாலிவுட் சினிமாக்களை வியந்து பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த மாதிரியான ஒரு பிரமாண்டத்தை நம் படங்களில் பார்த்துவிட மாட்டோமா? என்று ஏங்கியிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் ஷங்கர்.


தனது ஒவ்வொரு படத்திலும் தொழில் நுட்பரீதியாக மற்றும் கதைக்களத்தில் ஏதாவது ஒரு புதுமையை சேர்க்க நினைத்தார் ஷங்கர். ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்சிபடுத்தியது, அதே படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில்  இரண்டு ஐஷ்வர்யா ராயை ஒரே நேரத்தில் நடனமாட வைத்தது. இந்தியன் படத்தில் கமலை வயது முதிர்ந்த ஒரு கிழவராக ரசிகர்களை நம்பவைத்தது, காதலன் படத்தில் நடனமாடியபடி பிரபுதேவாவை ஓவியம் வரைய வைத்தது, அந்நியன் படத்தில் மூன்று வகையான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியது, பாய்ஸ் படத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே பாடலில் நடனமாட வைத்தது,  நண்பன் படத்தில் அஸ்கு லஸ்கா பாடலில் ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து விட்டது. இப்படி அவர் படங்களில் எதார்த்தத்தை விட மிகையான அதே நேரத்தில் நாம் பார்த்து ரசித்த எத்தனையோ அம்சங்களை ரசிகர்களுக்கு கொடுத்தபடியே இருந்திருக்கிறார் ஷங்கர்.


டெக்னாலஜி பிரியன்


புதுமையான விஷயங்களின் மேல் ஆர்வம் கொண்டவராக எப்போது ஷங்கர் இருந்திருக்கிறார். வெறும் பிரமாண்டத்திற்கான மட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களில் பயண்படுத்தப்படும் தொழில் நுட்பங்களைப் பற்றிய அப்டேட்களை தெரிந்து வைத்துக்கொள்கிறார். இன்று பான் இந்திய சினிமா என்கிற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கத்திற்கு முன்பாகவே தனது படங்களை இந்திய மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் ஆர்வம் ஷங்கருக்கு இருந்திருக்கிறது.


தன்னுடைய ஒவ்வொரு படத்திற்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து பனியாற்றியிருக்கிறார். 2.0 படத்தை முழுவதுமாக 3டி-யில் எடுத்தார். தற்போது தான் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் கமலை இளைஞராக காட்ட டீ ஏஜிங் தொழில் நுட்பத்தைப் பயண்படுத்தி வருகிறார்.


ஷங்கரின் கதைக்களங்கள்


ஒவ்வொரு காலத்திலும் அன்றைய டிரெண்டிங்கான கான்செப்ட் இருக்கும். தனது காலத்தில் மக்களிடம் எந்த கதை நல்ல வரவேற்பை பெறும் என்கிற தெளிவு அவருக்கு இருந்திருக்கிறது. ஜெண்டில்மேல் , இந்தியன் , அந்நியன் போன்ற படங்களில் அன்றைய இளைஞர்களுக்கு பொதுவாகவே இந்திய நாட்டின் நிலை மீதான கோபத்தை மையமாக வைத்து தனது படங்களை உருவாக்கினார். இந்த கதைகள் கமர்ஷியல் ரீதியாக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.


வித்தியாசமான பாய்ஸ்


ஷங்கரின் முற்றிலும் புதிதான, அதே நேரத்தில், தோல்வியடைந்த ஒரு முயற்சி பாய்ஸ் திரைப்படம். பாய்ஸ் படத்தை ஏன் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இயக்குநராக உருவாகி நிலைத்துவிட்ட ஒருவர் மீண்டும் அதே ஒரு இளைஞன் மனோபாவத்திற்கு சென்று புதிதான வெற்றி தோல்விக்கான பயமில்லாமல் புதிதான ஒன்றை முயன்று பார்க்கும் தைரியத்தை இழந்துவிடுவதே வழக்கம்.


 ஆனால் இண்டியன் , முதல்வன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பின்பும் ஒரு வேறுபட்ட முயற்சியாக இந்தப் படத்தை முயன்று பார்த்தார்.


 சாதனை படைத்த எந்திரன்


கிட்டதட்ட ஷங்கரின் கனவுப்படம் என்று எந்திரன் படத்தை சொல்லலாம். ஆறு வருடம் தவமிருந்து இந்தப் படத்தை இயக்கி முடித்தார் ஷங்கர். ஷங்கரின் மிகப்பெரிய பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா இந்தப் படத்தின் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மறைந்தார். கிட்டதட்ட தனது ஒரு கையை இழந்ததை போல் உணர்ந்த ஷங்கர் படத்தை இயக்கி முடித்தார்.


தமிழ் சினிமாவில் தரத்தை உயர்த்தியதில் எந்திரன் படத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இப்படியான கதைக்களத்தை எடுத்து அதை மக்களை கொண்டாட வைக்க ஷங்கரால் மட்டுமே முடிந்தது.


இந்தியன் 2


 ராஜமெளலியின் வருகைக்குப் பின் ஷங்கரின் திரைப்படங்களின் மேல் இருந்த பிரமிப்பு சற்று குறைந்திருக்கிறதுதான். அதே நேரத்தில் பல மொழிகளில் சின்ன வயதிலேயே மிக பிரம்மாண்டமான படங்களை எடுக்கக்கூடிய திறமையான இயக்குநர்கள் இன்று வந்துவிட்டார்கள். ஆனால் இதெல்லாம் ஷங்கருக்கு ஒர் ஆரோக்கியமான சவால்தான்.


போட்டியே இல்லாமல் விளையாடுவதில் அவருக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது.  தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஷங்கர். இதனைத் தொடர்ந்து தனது கேம் சேஞ்சர் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் நடிகர் விஜயுடம் இரண்டாவது முறையாக இணைய இருக்கிறார். மறுபடியும் இந்திய சினிமாவின் கேம் சேஞ்சராக இருப்பாரா ஷங்கர்? என்பதுதான் கேள்வி.


தமிழ் சினிமாவின் கேம் சேஞ்சருக்கு பிறந்த்நாள் வாழ்த்துக்கள்.