சிவகார்த்திகேயன் இன்றையை தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களுள் ஒருவர்.100 கோடி பிஸ்னஸ் கொண்ட மாஸ் ஹீரோ. ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவரும் ஜாலி டான். ஆனால், அவர் அதுமட்டுமே அல்ல. கனவுகளை ஏந்திக்கொண்டு இலக்கை அடைவோமா என தெரியாமல் குழம்பி திரிந்து கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்குமான இன்ஸ்பிரேஷன். பின்னணி எதுவுமே தேவை இல்லை. வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம்.




கிரிக்கெட்டில் எத்தனையோ ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள். வானளாவிய சாதனை செய்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை விட ஒரு படி அதிகமாகவே நாம் நடராஜனை கொண்டாடி கொண்டிருக்கிறோம். காரணம், அவர் நம்மிலிருந்து புறப்பட்டு சென்றவர். நம்மை போன்ற சமூக சூழலில் வளர்ந்தவர். நம்மை போன்றே எந்த பின்னணியும் இல்லாமல் கனவுகளை மட்டுமே ஏந்தி திரிந்தவர். அவர் வெல்லும் போது நாமே வென்றதை போன்ற உணர்வு உண்டாகிறது. நாமும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட தொடங்குகிறது. இந்த விஷயத்தில் நடராஜனுக்கும் முன்னோடி சிவகார்த்திகேயன்.


கனவு தொழிற்சாலையில் கரடுமுரடான கருப்பு நிறத்தவர்களுக்கு வாய்ப்பே இல்லை எனும் சூழலில் அதை உடைத்தெறிந்து சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் உயர்ந்தார். ரஜினிகாந்த்தின் வருகைக்கு பிறகு அந்த காலக்கட்டத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமா அதுவரை வகுத்து வைத்திருந்த அழகு இலக்கணத்திற்கெல்லாம் உட்படாமல் கோலிவுட்டில் கால்பதிக்க ஆரம்பித்தனர். அந்த 70-80 காலகட்ட தமிழ்சினிமா சாமானியர்களின் கையில் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால், 90 களுக்கு பிறகு எக்கச்சக்கமான வாரிசு நடிகர்கள் அறிமுகமாகினார். தமிழ் சினிமா பெரும்பாலும் வாரிசுகளாலயே நிரம்பி வழிந்தது. சாமானியர்கள் கொஞ்சம் எட்டி நின்றனர். இந்த நிலையை மாற்றியெழுதியவர் சிவகார்த்திகேயன். நம்மிலிருந்து ஒருவராக திருச்சியிலிருந்து புறப்பட்டு சின்னத்திரை வழியாக கோலிவுட்டிற்கு ரூட் பிடித்து டாப் கியரில் சென்று கொண்டிருகிறார்.


சிவகார்த்திகேயனை பற்றி பேசும் போது 'எல்லாரும் சினிமாவுக்கு வந்து ஸ்டார் ஆவாங்க. அவரு மட்டும் ஸ்டார் ஆகிட்டு சினிமாவுக்கு வந்தாரு' என சொல்வார்கள். துளி கூட மிகையில்லாத கமெண்ட் இது. சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த போதே அவருக்கென தனி ரசிகர் வட்டம் இருந்தது. மிமிக்ரி செய்வார், நடனம் ஆடுவார், டைமிங்கில் கவுண்டர் கொடுப்பார். ஜாலியான கேலியான கலாயான அந்த சிவகார்த்திகேயன் அத்தனை தரப்பின் உள்ளங்களையும் கவர்ந்திருந்தார். இளைஞர்களுக்கு கல்லூரி தோழனை போலவும், சிறுவர்களுக்கு ஏரியாவின் சேட்டை பிடித்த மூத்த அண்ணன்களை போலவும்  அறிமுகமாகியிருந்தார். பாய்ஸ் Vs கேர்ள்ஸ், அது இது எது, ஜோடி நம்பர் 1 என சிவகார்த்திகேயன் கால்பதித்த அத்தனை ஷோக்களும் அதிரிபுதிரி ஹிட்.  லாக்டவுண் சமயங்களில் கூட இந்த நிகழ்ச்சியெல்லாம் யூடியூப்பில் ட்ரெண்டாகி கொண்டிருந்ததே இதற்கு சாட்சி. 




தொலைக்காட்சியில் உச்சபட்ச புகழை பெற்றபிறகு, திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மெரினாவில் சிறுவர்களோடு ஒரு ஓரமாக சுற்றி திரிந்தவர், தனுஷுடன் '3' இல் பள்ளி தோழனாக கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். காமெடியனாக கொடிகட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் அதை பொய்யாக்கி ஹீரோ வேடம் பூண்டு எடுத்த அவதாரம் அசுரத்தனமானது. விரல் விட்டு எண்ணும் படங்களிலேயே மாஸ் ஹீரோ எனும் இமேஜை பெற்றார்.


'கரகாட்டக்காரன் படத்திற்கு கூடியதை போன்று மக்கள் தியேட்டரில் குவிந்துக்கொண்டிருக்கிறார்கள்' என ரஜினிமுருகன் படம் ரிலீசான சில நாட்களில் அதன் தயாரிப்பாளரான லிங்குசாமி பேசியிருந்தார். ரஜினிமுருகன் படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள் லிங்குசாமியின் வார்த்தைகளை 100% ஆமோதிப்பார்கள். திருநெல்வேலியில் ஒரு திரையரங்கில் அந்த படத்தை பார்க்க கவுண்டரில் 4 மணி நேரம் காத்துக்கிடந்ததை என்றைக்கும் மறக்க முடியாது. நாகர்கோவில், தூத்துக்குடி என டிக்கெட் கிடைக்காமல் பக்கத்து மாவட்டத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு வந்திருந்த கூட்டத்தையெல்லாம் டிக்கெட் கவுண்டரில் பார்க்க முடிந்தது.




2016 பொங்கலுக்கு ரிலீசான ரஜினிமுருகன் படம் சிவகார்த்திகேயனுக்கு 9 வது படம்தான். சினிமாவில் அவர் அறிமுகமாகி 4 வருடங்கள்தான் ஆகியிருந்தது. இத்தனை குறுகிய காலத்தில் தமிழ் சினிமா வேறெந்த நடிகருக்கும் இத்தனை பெரிய வரவேற்பை கண்டதில்லை.


அதேமாதிரி,  சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை முதல் நாள் பார்த்த அனுபவமும் இன்னும் அப்படியே நினைவில் நிற்கிறது. படத்தின் க்ளைமாக்ஸில் சிவகார்த்திகேயனின் பேச்சை கேட்டு ஊர் மொத்தமும் திரண்டு டார்ச் அடித்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல காட்சியமைக்கப்பட்டிருக்கும். ஹவுஸ்ஃபுல்லாக கிட்டத்தட்ட அந்த தியேட்டரில் படத்தை பார்த்துக் கொண்டிருந்த 800 பேருமே அந்த காட்சியின் போது தங்களின் மொபைலின் ஃப்ளாஸை அடித்து ஆராவாரம் செய்திருந்தனர். ஒரு 5 நிமிடத்திற்கு மெரினாவின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகுந்துவிட்டு வெளியே வந்ததை போல இருந்தது. அதுவரை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே படம் நடித்திருந்த ஒரு நாயகனால் ரசிகர்களை இந்தளவுக்கு படத்தோடு ஒன்ற வைக்கமுடியுமா என்பது பெரும் ஆச்சர்யமே.




இதற்கெல்லாம் காரணம் சிவகார்த்திகேயன் படங்களில் நிறைந்திருக்கும் பொழுதுபோக்கு தன்மையும் அவரின் வேடிக்கையான நடிப்பு மட்டும் இல்லை. அவர் நம்மிலிருந்து புறப்பட்டவர் எனும் உணர்வுமே ஒரு முக்கிய காரணம். அவரின் ஒவ்வொரு வெற்றியுமே நம்முடைய நாளைக்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பரிசளிப்பதாகவே இருக்கிறது. 


'எனக்கு இதுதான் வரும். இதெல்லாம் வராதுனு ஸ்டாம்ப் குத்திக்கிட்டே இருந்தாங்க. நா அதை உடைச்சுக்கிட்டே இருக்கேன்' என சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பேசியிருப்பார். சிவகார்த்திகேயன் இன்று அடைந்திருக்கும் உயரங்களுக்கெல்லாம் அடிப்படை இதுதான். உனக்கு ஆங்கரிங் வராது You are Rejected என கூறிய அதே இடத்தில் ஆங்கரிங்கில் ஒரு உச்சபட்ச இடத்தை அடைந்தார். காமெடிக்குதான் லாயக்கு என கூறிய போது ஹீரோவாக அவதாரமெடுத்து அசத்தினார். டான்ஸெல்லாம் சொதப்பல் என கூறிய போது வெறித்தனமாக ஆட தொடங்கினார். சிவகார்த்திகேயனின் இத்தனை வருட கரியர் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமும் இதுவே. 'உன்னால முடியாதுன்னு யாராவது சொன்னா...நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன!!'


Also Read | Rasi Palan Today, Feb 17: மேஷத்துக்கு எச்சரிக்கை.. மீனத்துக்கு அமைதி.. இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..