தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞராகத் திகழ்ந்த கிரேஸி மோகன் பிறந்தநாளில் நடிகர் கமல்ஹாசன் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.


தனது நண்பரும் எழுத்தாளருமான கிரேஸி மோகனை நினைவுகூர்ந்து கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ”என் அன்புக்குரிய நண்பர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாக தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர்.


அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகண்ட வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 



சத்யா படப்பிடிப்பின்போது .. கமல்ஹாசன் - கிரேசி மோகன்


 






கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பொய்க்கால் குதிரை’ எனும் திரைப்படத்தில் வசனம் எழுதி பிரபலமானார் கிரேஸி மோகன்.


கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், தெனாலி, ஒளவை சண்முகி, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களிலும் வசனம் எழுதியிருக்கிறார். அபூர்வ சகோதரர்கள் தொடங்கி மன்மதன் அன்பு வரை கமல் - கிரேஸி மோகன் கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ”பூட்ட கேசு, ஒரு வேள, பூட்டுப் போட்ட சூட்கேஸாக இருக்குமோ?” என்ற அவரின் வசனத்தைக் கேட்டதும் சிரிப்புடன் அவரின் முகமும் நம் முன் நிச்சயம் வந்து போகும். 


கிரேசி மோகன் நகைச்சுவை


பன் என்கிற நகைச்சுவை


பஞ்சதந்திரம் திரைப்படத்தின் காமெடி ஆங்கிலத்தில் பன் (pun) என்று சொல்லப்படும் ஒரு வகையான நகைச்சுவைத் தன்மையை கையாண்டது. க்ரேஸி மோகனின் அனைத்து வசனங்களுமே பன் வகைமையைச் சார்ந்தவை. பன் என்பது ஓசையில் ஒரு அர்த்தமும் பொருளாக வேறு அர்த்தமும் கொண்ட சொற்களை இடம்மாற்றி பயன்படுத்தும்போது ஏற்படும்  குழப்பங்களால் உருவாகும் நகைச்சுவை. உதாரணத்திற்கு  படத்தில் வரும் முன்னாடி பின்னாடி என்ன இருந்தது என்று காரை நிறுத்தி போலீகாரர் கேட்கும் காட்சியில் ஏற்படும் குழப்பமான காட்சி. தமிழில் சொன்னால் எடக்கு மடக்கான  காமெடி என்று இதை சொல்லலாம். அந்த காட்சியின் இறுதி வரை அதாவது அவர்களின் கார் அந்த இடத்தைவிட்டு நகரும் வரை கதாபாத்திரங்கள் பேசுவது அனைத்துமே எடக்கு மடக்குதான்.


நாகேஷ், கமல், க்ரேஸி மோகன்


தமிழ் திரைப்படங்களில் பன் (pun) நகைச்சுவை ரகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் கமல் மற்று க்ரேஸி மோகனதான். இதற்கு முன்பாக அவ்வப்போது நாகேஷ் இந்த ரக நகைச்சுவையை திரையில் கண்டிருப்போம்.  பஞ்சதந்திரம்  படத்தில் நாகேஷ் நடித்திருந்தது தற்செயல் அல்ல .


 மைக்கேல் மதன காமராஜன்:


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த காமெடி படம் என்று இதை குறிப்பிடலாம். இந்தப் படத்தில் வரும் காமெடி காட்சிகள் நமக்கு சிரித்து வயிறு வழி ஏற்படும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக இப்படத்தில்,'திருப்பு திருப்பு னு சொன்னான் நான் ஸ்கூட்டரை திருப்பிட்டேன்' என்ற காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும். 


பஞ்சதந்திரம்:


இந்தக் கூட்டணியில் அமைந்த மற்றொரு  சிறப்பான காமெடி திரைப்படம் 'பஞ்சதந்திரம்'. இப்படத்தில் கமல்,யுகி சேது, ஜெயராம் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள் கூட்டணி நம்மை சிரிப்பு மழையில் நனைக்கும். இவர்களுடன் நாகேஷ் இணைந்து நம்மை மேலும் ரசிக்க வைத்திருப்பார். இப்படத்தில் குறிப்பாக முன்னாடி பின்னாடி என்ன இருந்தது என்ற காமெடி பெரிய ஹைலைட் ஆக அமைந்திருக்கும். அத்துடன் பெங்களூரு ட்ரிப் போக அவர்கள் செய்யும் திட்டம் மேலும் ஒரு படி சிரிப்பை அதிகரிக்கும்.


வசூல்ராஜா எம்பிபிஎஸ்:


வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதில் கிரேஸி மோகனும் நடித்திருப்பார். அவர் இப்படத்தில் கூறும் 'தட் ஹைவுடூ ஐ நோ' சார் என்ற வசனம் பெரியளவில் ஹிட் ஆனது. அத்துடன் இந்தப் படத்தில் கமல்ஹாசன் மருத்துவராக நடிக்கும் காட்சிகள் சிரிப்பை வேறு கட்டத்திற்கு எடுத்து செல்லும்.