இந்தியன் தாத்தா கெட் அப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்த நேதாஜி சிலை முன் நின்றபடி நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ள ஃபோட்டோ வைரலாகியுள்ளது. 


இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா எனப் பலரும் நடித்து வருகின்றனர்.


கமல் நடிப்பில் முன்னதாக வெளியான ’விக்ரம்’ திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது.


ஆனால் விக்ரம் படத்துக்கு முன்னரே 2019ஆம் ஆண்டு தொடங்கிய ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு, ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த விபத்து, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.


தொடர்ந்து உதயநிதி தலையிட்டு இந்தப் பஞ்சாயத்தை முடித்து வைத்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நிகழ்ந்து வரும் நிலையில், இந்தியன்  தாத்தா கெட் அப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்த நேதாஜி சிலை முன் நின்றபடி நடிகர் கமல்ஹாசன் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.


”25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


 






கமலின் இந்தப் பதிவு ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வரும் நிலையில், பா. ரஞ்சித்,மணிரத்னம் படங்கள் என அடுத்தடுத்து கமல் கமிட் ஆகியுள்ளார்.


இதனிடையே முன்னதாகத் தொடங்கப்பட்ட தேவர் மகன் இரண்டாம் பாகப் பணிகள் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மகேஷ் நாராயணன்,  “படம் கைவிடப்படவில்லை. இது கமல் சாரின் கதை. தற்போது அவர் பல படங்களில் பிஸியாக இருக்கிறார். அதனால் நாங்கள் சிறிது காலத்துக்கு எங்கள் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். ஆனால் படம் கைவிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.