நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறக்க முடியாத இந்தியன் படம்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரும், சினிமாவின் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனும் 1996 ஆம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் முதல்முறையாக இணைந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டர் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது.
பிரமாண்டமான “இந்தியன் 2”
இதனிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தை ஷங்கர் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறைவேற்றும் விதமாக 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங், காளிதாஸ் ஜெயராம், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
பல பிரச்சினைகளை கடந்து ஒருவழியாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், லைகா நிறுவனம் சார்பில் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் மட்டுமல்லாமல் 3 ஆம் பாகத்துக்கான காட்சிகளும் கிட்டதட்ட எடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இப்படத்தின் மூலம் ஷங்கர் மீண்டும் தமிழில் கம்பேக் தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வெளியான புதிய அப்டேட்
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், முன் கூட்டியே நவம்பர் 3 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.