இந்தியன் 2


ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்துள்ள இந்திய 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், சமுத்திரக்கனி, விவேக், மனோபாலா உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். 


இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூன் 25ஆம் தேதி வெளியானது. இன்றைய அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தார் என்றால் என்னவாகும் என்கிற கற்பனையை பிரமாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளார் ஷங்கர். ட் ரெய்லரில் கமல் பலவிதமான தோற்றங்களில் காணப்பட்டார். வயதான லுக்கில் கமல் வர்மக் கலை செய்து வில்லன்களை பறக்கவிடும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன. ஒரு தரப்பு ரசிகர்களை இந்த ட்ரெய்லர் கவர்ந்திருந்தாலும் இன்னொரு தரப்பினர் கமலின் கெட் அப் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.


இந்தியன் தாத்தாவின் வயது


இந்தியன் முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் இந்தியன் 2. முதல் பாகத்தில் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற சேனாபதி 28 ஆண்டுகளுக்கு திரும்பி வருகிறார். இந்தியன் 2 ட்ரெய்லரில் சேனாதிபதி வர்மக் கலையை பயன்படுத்தி சண்டையிடும் காட்சிகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். கணக்குப்படி இந்தியன் தாத்தாவிற்கு தற்போது 106 வயது ஆகிறது. 106 வயது ஆகும் ஒருவர் எப்படி இப்படி சண்டை போட முடியும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதே கேள்வி பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனிடமும் கேட்கப் பட்டது.


இதற்கு பதிலளித்த கமல் “வயது 140 ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு 120 வயதானாலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் படத்தில் என்ன வயது என்று இயக்குநர் தான் தீர்மானிக்க வேண்டும்“ என பதிலளித்தார்.


விளக்கமளித்த ஷங்கர் 


இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த இயக்குநர் ஷங்கர் “சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் லூ ஷி ஜியான். அவருக்கு வயது 120. தனது 120 வயதிலும் அவர் பறந்து பறந்து அடிப்பது, கிக் செய்வது என எல்லாம் செய்து வருகிறார். அதேபோல் தான் சேனாபதியின் கேரக்டரும்.  கதைப்படி சேனாபதி ஏசியன் மார்ஷியன் ஆர்ட்ஸ் எனப்படும் வர்மக் கலைத் தெரிந்தவர்” என விளக்கமளித்துள்ளார்.