Indian 2 Audio Launch: இந்தியன் என்பதே அடையாளம், பிரிக்க நினைச்சா.. இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் வார்னிங்!
Indian 2 Audio Launch LIVE Updates: 1996ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
"நான் ஒருமுறை நடிக்க மாட்டேன் என்று சொன்னபோது டி.ஆர் சார் என் ரூமுக்கு வந்து “இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது” என்று அழுது என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு போனார்” என சுவாரஸ்யத் தகவல் பகிர்ந்துள்ளார்.
கடவுளைப் பற்றி கமல் பேசாத மேடை உண்டா? இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் பேசிய கமலின் ஃபிலாசஃபி இதுதான் "என்னைப் போன்ற பகுத்தறிவாளிகள் கடவுள் இல்லாமல் இருந்திடலாம், ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்பே சிவமில் அன்பு தான் முதன்மை" எனக் கூறியுள்ளார்.
தனது மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணத்தைப் பற்றிய பேச்சை சூசகமாகப் பேசியுள்ளார் கமல். “ஸ்ருதி எல்லாம் மனசு வெச்சிருந்தா நான் இப்போவே தாத்தாதான் " என்று மேடையில் பேசியுள்ளார்.
"நான் தமிழன். நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இங்க பிரிச்சு விளையாடலாம்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர். நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதிகாக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும்" என கமல் பேசியுள்ளார்.
இந்தியன் 2 படம் பற்றி பேசிய கமல், “பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்பப் பிடிக்கும் ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இந்த படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து இன்னைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு சந்தோஷம்" என்று கூறியுள்ளார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் " இந்தியன் ஒரு பெரிய கதை .இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாகங்கள். ஷங்கரிடம் நான் அப்போது பார்த்த அதே ஷார்ப்னெஸை இப்போதும் என்னால் பார்க்க முடிகிறது. இதே மாதிரியான ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்திருந்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா- மகன் என இரு வேடத்திலும் நடிக்கச் சொன்னார். இந்த இசைவெளியீட்டிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம் " என்று கூறியுள்ளார்.
“கமல் சார் 360 டிகிரி நடிகர் என நான் ஒரு விழாவில் கூறியுள்ளேன். ஆனால் இந்தியன் 2வில் கமல் சார் 361 டிகிரி நடிகராக அப்டேட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் 4 நாள்கள் கயிற்றில் தொங்கியபடி வரைஞ்சிக்கிட்டே, பஞ்சாபி பேசி கமல் நடித்துள்ளார்” - ஷங்கர்
“நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 3ஆம் பாகத்தில் தான் வருகிறார். இரண்டாம் பாகத்தில் இல்லை” - ஷங்கர்
“இந்தியன் 1 ரிலீஸ் அப்போ கமல் சார் இந்தியன் 2 பண்ணலாம்னு சொன்னாரு. அப்போ என்கிட்ட கதை இல்ல. 7, 8 வருஷத்துக்கு அப்புறம் நியூஸ்ல ஊழல்னு இருந்தத பாத்து “இப்ப இந்தியன் தாத்தா வந்தா எப்படி இருக்கும்”னு யோசிச்சேன். 2.0 படத்துக்கு அப்புறம் எனக்கு கதை ஸ்ட்ரைக் ஆச்சு” என இயக்குநர் ஷங்கர் பேசியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா மேடையில் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், அனிருத் இணைந்திருக்கும் கேண்டிட் புகைப்படங்களை லைகா பகிர்ந்துள்ளது.
“ஒரே நேரத்தில் இந்தியன் 2 & 3, கேம் சேஞ்சர் என மூன்று படங்கள் எடுப்பது சாதாரண விஷயமில்ல. ஷங்கர் சார் நீங்க உண்மையா க்ரேட். அனிருத் தைரியமா ஓகே சொல்லி பண்ணி இருக்காரு” என சிம்பு பேசியுள்ளார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன், “சிம்பு லேட்டா வந்தாருனு மக்கள் சொல்லுவாங்க.. ஆனால் நான் தக் லைட் ஷூட்டிங்கில் இருந்து வரேன். கமல் சார் உண்மையான பான் இந்திய நடிகர். இந்தியன்னா ஒற்றுமை. கமல் சார்கூட நடிக்கும்போது என் மூளைல எதுவும் ஓடல, அவர பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு” எனக் கூறியுள்ளார்.
இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கம்பேக் இந்தியன் பாடலுக்கு அனிருத் லைவாக பர்ஃபாம் செய்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் லைவாக பர்ஃபார்ம் செய்த அனிருத், இந்தியன் முதல் பாகத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானைப் புகழ்ந்து பேசியுள்ளார். “சமூக வலைதளங்களில் தற்போது இவர் சகாப்தம், அவர் சகாப்தம் என்று பேசுகின்றனர். சிக்ஸ்க்கு அப்புறம் செவன் டா, ரஹ்மானுக்கு அப்புறம் எவன் டா” என அனிருத் பேசியுள்ளார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்ட நிலையில், நடிகர் சிம்பு தற்போது வருகை தந்துள்ளார். தக் லைஃப் பட கெட்-அப்பில் சிம்பு வருகை தந்துள்ளது கமல் - சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன் 2 இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் படத்தின் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்
இந்தியன் 2 இசை வெளியீட்டி உலகநாயகன் கமல்ஹாசனின் மாஸ் எண்ட்ரி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இந்தியன் 2 இசை நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெல்சன் திலிப்குமார் “ இந்தியன் 2 படம் அறிவிக்கப் பட்டபோது நான் விஜய் தொலைக்காட்சியில் பேக்ஸ்டேஜில் இருந்தேன் . கமல் சார் நிறைய விஷயங்களை பற்றி பேசுவார். முன்று நாட்களுக்குப் பிறகு நான் அவரிடம் நீங்க சொல்ற யாரையும் எனக்கு தெரியாது என்று சொன்னேன். அது உங்க முகத்தை பார்த்தாலே தெரிகிறது என்று கமல் சொன்னார். கமலிடம் திட்டு வாங்கியதை என் நண்பர்களிடம் பெருமையாக சொன்னேன். ஜெயிலர் படத்தின் போது ரஜினி சார் ஷங்கர் சாரைப் பற்றி நிறைய பேசுவார். ஷங்கரைப் போல் என்னையும் கடுமையாக உழைக்க சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்” என்று பேசினார்
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். ”இந்தியன் 2 படம் அறிவிக்கப் பட்டதில் இருந்தே நான் இந்தப் படத்தை எதிர்பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஷங்கர் மற்றும் கமல் சாரை பார்க்கும்போது எல்லாம் படத்தைப் பற்றிய அப்டேட் கேட்பேன். மேலும் விக்ரம் படத்திற்கு கமல் சார் கையெழுத்திடும் போது அவர் இந்தியன் தாத்தா கெட் அப் இல் இருந்தார் அப்போது அவர் கையெடுத்து போட மட்டுமே 3 நிமிடம் ஆனது , அப்படி என்றால் அந்த மேக் அப் போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய மூன்றாம் நாள் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டில் எழுத்து பிழை இருந்ததால் கமல் சார் என்னை திட்டினார்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
இந்தியன் 2 இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் கருப்பு நிறத்தில் ஓவர்கோட் அணிந்து மாஸான எண்ட்ரி கொடுத்துள்ளார்.
“இந்தியன் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. இந்தப் படத்தில் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 96இல் நாம் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம். நான் இந்தப் படத்தில் சின்னதாக இருக்கிறேன் என்பது பெருமையான விஷயம். என் ரோல் பற்றி ஷங்கர் சார் தான் சொல்ல வேண்டும். பாய்ஸ் படத்தின் ஆடிஷனுக்கு நான் புகைப்படம் அனுப்பினேன். என் ஆசை இப்போது நடக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோ இந்தியன். கார்த்திக் சுப்பராஜின் எல்லா படத்திலும் நான் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவர் என் நண்பன்.” எனப் பேசியுள்ளார்
இந்தியன் 2 இசைவெளியீட்டில் பேசிய இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் கதையைப் பற்றிய ஒரு குட்டி அப்டேட் கொடுத்துள்ளார். இன்றைக்கு இருக்கும் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற ஐடியா தான் இந்த படம் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் இசைவெளியீட்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் உள்ளிட்ட இருவரும் வருகைத் தந்துள்ளார்கள்
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் நாசர், “கமல், ஷங்கர், ரெட் ஜெயிண்ட் மூவரும் மூன்று சக்திகள். பான் இந்தியா எனும் வார்த்தை வரும் முன்பே கமல், ஷங்கர் இருவரும் அதனை செய்துள்ளனர்” எனப் பேசியுள்ளார்.
“இந்த ஆண்டு நான் மிகவும் எதிர்பார்த்த பாடல்கள் அடங்கிய ப்ராஜக்ட் இந்தியன் 2. ஷங்கர் சாரின் படங்களில் அவர் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். முதல் பாடலான ‘பாரா’ பாடல் நாங்கள் எதிர்பார்த்ததை விட உலக தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலின் மூலம் நான் என் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளேன்” என பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டிற்கு நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் வருகைத் தந்துள்ளார். தனது குடும்பத்தில் அனைவரும் கமல் ரசிகர்கள் என்றும் இந்தியன் 2 படம் வெளியாவதை தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாட இருப்பதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் தனது மனைவி, மகள் மற்றும் மருமகன் என் மொத்த குடும்பத்துடன் வருகைத் தந்துள்ளார். “இந்தியன் 2 படத்துக்காக எங்கள் ஆண்டவர் கமல்ஹாசனுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்” என்று ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கதறல்ஸ் என்கிற பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலைப் போல் இந்தப் பாடலிலும் அனிருத் அலறவிட்டிருக்கிறார்
இந்தியன் 2 இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் துவங்கியுள்ள நிலையில் இயக்குநர் ஷங்கர் அரங்கத்திற்கு வந்திறங்கியுள்ளார்
இந்தியன் தாத்தாவின் ட்ரேட்மார்க் விரல் முத்திரை இந்தியன் 2 விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியன் தாத்தாவின் வர்மக்கலை விரல் முத்திரை சிலை செட் அமைக்கப்பட்டு நிலையில், இந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கில், இந்தியன் தாத்தா கெட்- அப்பில் நபர்கள் மாஸாக விழாவுக்கு வருபவர்களை வரவேற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொதுவாக தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் லைவ் பர்ஃபாமன்ஸ் தந்து அனிருத் கலக்கும் நிலையில், இந்தப் படத்தின் கம்பேக் இந்தியன் மற்றும் கதறல்ஸ் பாடல்களை அனிருத் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளதாகத் தகவல். அனிருத் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை தரும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, சிவகார்த்திகேயன் தவிர்த்து நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி, சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் இணையத்தில் டிக்கெட்டுகளைப் பகிர்ந்து உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளத்தில் அனிருத் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு இடையில் கருத்து மோதல் தொடங்கியுள்ளது. இந்தியன் முதல் பாகத்திற்கு ரஹ்மான் இசை அமைத்த அளவுக்கு இரண்டாம் பாகத்தின் இசை இல்லை என ஒரு தரப்பினரும் , மிகவும் புதுமையான ஆல்பம் ஒன்றை அனிருத் இந்தியன் 2 படத்திற்கு கொடுத்துள்ளதாக இன்னொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.
இந்தியன் 2 படத்தின் ஜூக் பாக்ஸ் தற்போது யூடியுபில் வெளியாகியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது இந்த ஆல்பம். ஏற்கனவே பாரா மற்றும் நீலோர்பம் ஆகிய இரு பாடல்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மீதி நான்கு பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் மற்றும் பிரியா பவானி சங்கர் என இந்தியன் 2 படத்தின் மூன்று நாயகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்தியன் 2 இசை நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி. இருவரும் காதலித்து வருவதை சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்த நிலையில் இந்த புது காதல் ஜோடி தங்கள் திருமணத்தைப் பற்றிய அப்டேட்களை இந்த நிகழ்ச்சியில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்
இந்தியன் 2 இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிலம்பரசன் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பல நாட்கள் கழித்து சிலம்பரசன் மேடையில் பேசுவதை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை ஆறு மணியளவில் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்வில் படத்தின் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் படத்தில் இருந்து சில பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாக படுத்த இருக்கிறார்.
Background
28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்
ஊழலையும் அதனால் நடக்கும் குற்றங்களையும் மையப்படுத்தி பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன். ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, செந்தில், கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப் படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. அந்தக் காலத்தில் இருக்கும் உயர் தொழில்நுட்பங்களுடன் வெளியாகி படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
துள்ளலான அக்காடனு நாங்க பாடல், காதலருடன் டூயட் பாட மாயா மச்சிந்திரா, டெலிபோன் மணி போல் ஆகிய இரு பாடல்கள், குடும்பங்கள் கொண்டாடும் பச்சைக் கிளிகள் தோளோடு பாடல், சுதந்திர உணர்வைத் தரும் கப்பலேரி போயாச்சு பாடல் என ஏ.ஆர்.ரஹ்மானின் மொத்த ஆல்பமும் ஹிட்தான். இசை மட்டும் அல்ல பின்னணி இசையிலும் பின்னிப் பெடலெடுத்துவிட்டார்.
பிரமாண்ட இசை வெளியீட்டு விழா
இத்தனை ஆண்டுகள் கழித்தும் சேனாபதியான இந்தியன் தாத்தாவிற்கு மவுசு குறையாமல் இருக்க, அவரின் கம்-பேக் செய்தி திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 குறித்த அறிவிப்பு 2018ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு தடங்கல்கள், இடையூறுகளைக் கடந்து இந்த ஆண்டு வெளியாகிறது. உலக நாயகன் கமல் ஹாசனுடன் இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
திரையில் மீண்டும் அதே பிரமாண்டத்தை கொண்டு வர, படக்குழு உலகெங்கும் சுற்றி சுற்றி ஷூட் செய்துள்ளனர். படப்பிடிப்பிலும், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பிலும் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒரு வழியாக படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கமல் - அனிருத் - ஷங்கர் கூட்டணி
இதனையொட்டி, படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் ஜூன் 1ஆம் தேதியான இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், ஏற்கெனவே இப்படத்திற்கான ட்ராக் லிஸ்டை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பாரா, காலண்டர் சாங், நீலோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்ட 6 பாடல்களை உள்ளடக்கிய ஆல்பம் யூடியூப் பக்கத்தில் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகிவிட்டது.
இன்று ஆறு மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதில், படக்குழுவினருடன் மோகன் லால், மம்மூட்டி, சிவராஜ் குமார், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களை சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளனர். கோலிவுட் வட்டாரத்தில் இருந்து சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வருகை தரவுள்ளனர் என சொல்லப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -