இந்திய 2 மற்றும் 3, தக் லைஃப் , பிரபாஸ் படத்தில் கெளரவத் தோற்றம் என கமலுக்காக பிரம்மாண்ட படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன.
தேர்தல் பிரச்சார வேலைகளைத் தொடங்கும் கமல்
வரும் மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக மாநிலங்களவையில் ம.நீ.ம-க்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்ஹாசன்
இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சார வேலைகளை தொடங்க இருக்கிறார் கமல். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்ததும் தான் ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் அவர் நடிப்பார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 & 3
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து முடித்துள்ள படம் இந்தியன் 2. கடந்த 2017ஆம் ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா தொற்று பரவல், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து ஆகிய காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. கடந்த ஆண்டு முதல் முழுவீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
சென்னை, ஆந்திரா, தாய்வான், ஜோகன்ஸ்பெர்க் , போபால் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிகட்டமாக இப்படத்தின் இரண்டு பாடல்கள் படமாக்கப் பட்டன. இதில் நடிகர் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவருக்கும் இடையிலான பாடல் காட்சி ஒன்றும் தொடர்ந்து கமல்ஹாசன் இடம்பெற்ற பாடல் ஒன்று எடுக்கப் பட்டது. இந்த பாடல் சுமார் 30 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய 2 ஆம் பாகம் மட்டுமில்லாமல் 3 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகவிம். தற்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப்
இது தவிர்த்து மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் தேர்தல் பிரச்சார வேலைகள் முடிந்த கையுடன் தொடங்க இருப்பதாக கமல் கூறியுள்ளார். தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்த காரணத்தினால் கமல் படப்பிடிப்பிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் இப்படத்தில் நடிக்க இருந்த நடிகர் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத் தக்கது.