இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 (Indian 2) படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளார்கள். முன்னதாக கல்கி படத்திற்கான ப்ரோமோஷன்களில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தொடர்ச்சியாக இந்திய 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சென்னை, மும்பையைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள் படக்குழுவினர்.


ஏன் அனிருத்?


கடந்த ஜூன் 1ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் இசைவெளியீடு நடைபெற்றது. அன்றைய தினத்தில் இந்தியன் 2 படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஒரே கேள்விதான் கேட்கப்பட்டு வருகிறது. அதாவது இந்தியன் முதல் பாகத்துக்கு ரஹ்மான் சூப்பரான ஒரு ஆல்பம் ஹிட் கொடுத்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரை விட்டு ஏன் அனிருத் இசையமைக்க தேர்வு செய்தார்கள். ரஹ்மானின் இசைக்கு அனிருத் ஈடு கொடுக்க முடியுமா? என்கிற வகையிலான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.


இப்படியான கேள்விகள் பற்றி அனிருத் தெரிந்தே தான் வைத்திருக்கிறார். அதனால் தான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் தானும் ஒரு ரஹ்மான் ரசிகன் தான் என்று ரஹ்மானை உயர்த்திப் பேசினார். அதே நேரத்தில் அனிருத்தின் இசை குறித்து இயக்குநர் ஷங்கர் பல மேடைகளில் பாராட்டியும் பேசி இருக்கிறார். தனக்கு 100 சதவீதம் திருப்தி இல்லாதவரை அனிருத் புது டியூன் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இருந்தும் தமிழ்நாடு முதல் மலேசியா வரை இந்த ஒரே கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விக்கு கமல்ஹாசன் தற்போது பதிலளித்துள்ளார்.


நான் அனிருத் இசைக்கு ரசிகன் ஆகலாம்






மலேசியாவில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கமல் “கமல் நடிக்கவில்லை என்றால் ஷங்கர் கூப்பிடிருந்தால் இந்தப் படத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.


இந்தக் கேள்விக்கு ஷங்கர்தான் பதிலளிக்க வேண்டும். அது அவருடைய பொறுப்பு. அவருடைய விருப்பு. நான் இளையராஜா ரசிகன். ரஹ்மான் ரசிகன். இளையராஜாவின் இசையை புரிந்துகொள்ள எனக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதே போல் நான் அனிருத் இசைக்கும் ரசிகன் ஆவேன் என்று நம்புகிறேன்” என்று கமல் தெரிவித்துள்ளார்.