கதை 1: மோஹித் –ஜெப்ரி

மோஹித்தும் ஜெப்ரியும் சென்னையில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் சந்தித்தனர். மோஹித் மும்பையைச் சேர்ந்த எம்ப்ராய்டரி கலைஞர், ஜெப்ரி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்த பரதநாட்டியக் கலைஞர்.இருவரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டபோது மோஹித் தனக்கு அடுக்குமல்லிப் பூங்கொத்தைப் பரிசாகத் தந்ததாகச் சொல்கிறார் ஜெப்ரி. பிரான்ஸ் நகரத்துச் சாலைகளில் ஒவ்வொன்றிலும் தங்களது காதல் கதையை பதித்தவர்களைத் தற்போது கொரோனா பெருந்தொற்று பிரித்திருக்கிறது. மோஹித் இந்தியாவிலும் ஜெப்ரி ப்ரான்ஸிலும்  இருந்தாலும் இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்வதில் தவறுவதில்லை என்கிறார் ஜெப்ரி. தொலைவிலிருந்தபடியே ஏதேனும் ஒரு வகையில் மல்லிகைப்பூங்கொத்துக்களை தினமும் பரிமாறிக்கொள்கின்றனர் இருவரும். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?


 






கதை 2:  தேவிகா - சஃபீர்

தேவிகா-சஃபீரின் காதல் கொண்டாட்டமானது. இருவரும் சந்தித்தது புனே கல்லூரியில். சஃபீர், தேவிகாவின் ஜூனியர். ‘யார் அந்த க்யூட் பையன்’ என தேவிகா நண்பர்களிடம் கேட்டதிலிருந்து தொடங்கியது இருவரது அறிமுகம். வாசிப்பு,அரசியல், மொழி, மக்கள் என இவர்களது காதல் விரிந்தது. ஊர்சுற்றிப் பறவைகள் இருவரும் காதலிக்கத் தொடங்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். சஃபீர் பிறப்பால் இஸ்லாமியர், தேவிகா ஒடுக்கப்பட்ட இந்து தலித். ‘என்னையும் சஃபீரையும் இந்தச் சமூகம் அத்தனையிலுமே எதிரெதிராகத் தான் பார்க்கும்.வயது, நிறம், மதம் உடல்வாகு என அத்தனையிலுமே நாங்கள் இருவரும் வேறுபட்டவர்கள். ஆனால் நாங்கள் எப்படியோ ஜாடிக்கு ஏற்ற மூடி எனப் பொருந்திப் போனோம். எங்கள் இருவரது குடும்பமுமே தீவிர மதநம்பிக்கை உடையவர்கள். நாங்கள் இருவரும் நேசிப்பது தெரிந்ததும் முதலில் அதிர்ந்து போனார்கள். அவர்கள் மனதை மாற்றுவது பெரும் போராட்டமாகவே இருந்தது.எப்படியோ ஒருவருடப் போராட்டத்துக்குப் பிறகு திருமணத்துக்குச் சம்மதித்தார்கள்’ எனச் சொல்லியபடி குழந்தைபோலச் சிரிக்கிறார் தேவிகா. அந்தக் குழந்தைச் சிரிப்பின் முன்பு மதமென்ன? வயதென்ன?. கடந்த  டிசம்பரில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.தேவிகா தற்போது வங்கியிலும் சஃபீர் விமான போக்குவரத்து கண்காணிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். எந்த அடையாளமும் இல்லாமல் காதல் மட்டுமே கொண்டு உருவாக்கியிருக்கும் இந்தப் புதிய வாழ்க்கையின் ஆச்சரியங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்கின்றனர் இருவரும்.


 







சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் காதலும் திருமணமும் குற்றமாகப் பார்க்கப்படும் இந்த தேசத்தில் தேவிகா-சஃபீரின் காதல் திருமணம் சமூகத்தில் மறுக்கப்பட்ட வகை, மோஹித் – ஜெப்ரியின் காதல் தடைசெய்யப்பட்ட வகை. இப்படி மறுக்கப்படும் குற்றமாகப் பார்க்கப்படும் காதல்களை அதன் கொண்டாட்டங்களைப் பொதுவெளியில் பேச உருவாக்கப்பட்டதுதான் ’இந்தியா லவ் ப்ராஜக்ட்’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கம்.


இந்த லவ் ப்ராஜக்ட் உருவான கதை பின்னணி சுவாரசியமானது. கடந்த வருடம் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் நகை விளம்பரம் ஒன்றில் தாயாகவிருக்கும்  ஒரு இந்துச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் மாமியார் வளைகாப்பு செய்வது போன்ற காட்சி  வலதுசாரிகளால் பெரிய அளவில் எதிர்ப்பைச் சந்தித்தது. ’லவ் ஜிகாத்’தை விளம்பரப்படுத்துகிறார்கள் என விமர்சித்தார்கள். ட்விட்டர் ட்ரெண்ட்டில் தனிஷ்க் நிறுவனத்தை தடைசெய்யச் சொல்லி ட்ரெண்டாக்கினார்கள். வேறு வழியில்லாமல் அந்த விளம்பரத்தையே நீக்கியது தனிஷ்க்கின் தாய் நிறுவனமான ’டாடா’.’எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்’ என அதற்கான காரணத்தைச் சொன்னார்கள்.இப்படி இந்தியாவில் விளம்பரங்களில் கூட காதல் வாழக்கூடாது என கங்கணம் கட்டித்திரிபவர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் இந்த லவ் ப்ராஜக்ட்.




இந்தப் பக்கத்தை பத்திரிகையாளர் தம்பதிகள் பிரியா ரமணி- சமர் ஹலன்கர் மற்றும் அவர்களது நண்பரான நிலோஃபர் வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். 90 சதவிகிதம் சாதி மதப் பொருத்தம் பார்த்தே நிகழும் இந்தியத் திருமணங்களில் இவை அத்தனையும் கடந்து வெற்றிகரமாக நிகழும் சாதி மதம் கடந்த திருமணங்கள் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. அவர்களையும் பெரும்பாலும் குடும்பங்கள் ஒதுக்கிவைப்பது அல்லது ஆணவக்கொலை செய்வதால் இவர்களின் அன்பு சமூகத்தில் ஒதுக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.  அவர்களது காதல் கதைகளை வெளியே சொல்ல முடிவதில்லை. அதைச் சொல்வதற்கான, அவர்களது கொண்டாட்டத்தைப் பகிர்வதற்கான தளமாகத்தான் இதனை உருவாக்கினோம் என்கிறார் ஹலன்கர்.



சிறு முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பக்கம் தற்போதுவரை 200 ஜோடிகளின் 200 அழகான காதல் கதைகளைப் பகிர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நோய் தொடர்பான செய்திகளையே பார்த்து அழுத்தத்தில் இருக்கும் மனங்களுக்கு இந்தப் பக்கத்தில் பகிரப்படும் கதைகள் பெரும் மீட்சியாக இருக்கும். காதலும் மீட்சிதானே!