இந்தியத் திரைப்பட உலகின் மிகப் பிரதானமானத் திரைப்படப் படப்பிடிப்பு நிலையம் என்று மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைக் குறிப்பிடலாம். மலைசூழ் மாநகரமான சேலத்தில், ஏற்காடு மலையடிவாரத்தில் இந்த படப்பிடிப்புத் தளம் அமைந்திருக்கிறது. கடந்த 1935ம் ஆண்டு எஸ்.டி.சுந்தரம் முதலியார் எடுத்த முயற்சியையடுத்து, இது நிர்மாணிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்புகள் 1982 ஆம் ஆண்டு வரை, நிற்காமல் நீடித்து நிலைத்திருந்திருக்கிறது.


மாடர்ன் தியேட்டர்ஸ்:


டி.ஆர்.சுந்தரம் மறைவுக்குப் பிறகு அவரின் மகனான ராமசுந்தரம்  முயற்சியில் வல்லவனுக்கு வல்லவன் என்ற பெயரில் தனது டைரக்ஷனில் முதல் படத்தை வெளியிட்டு, தமிழ்த் திரைப்பட உலகில் ஜேம்ஸ்பாண்ட் பாணிப் பட வரிசையைத் தொடங்கி வைத்தார். இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா? என வரிசையாகப் படங்களை எடுத்து வந்த ராமசுந்தரம், திடீரென்று  களைத்து, இளைத்துப் போனார். 
 இவ்வாராக, 1982ம் ஆண்டு முற்றிலுமாக நொடிந்துபோன, நொறுங்கிப் போன மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவின் பரபரப்பான படப்பிடிப்பு பணிகள், முற்றிலுமாக அற்றுப் போயின. 




'வர்மா' என்ற இனப்பெயரின் தொடர்பில் இருக்கும் குடும்பத்தார், மாடர்ன் தியேட்டர்ஸ் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினர். படப்பிடிப்புத் தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் பாணி அரங்கேறிவிட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு அங்கே மிகப்பெரிய குடியிருப்புக் கிராமம் என்ற வகையில், நவீனத்துவம் பெற்று விளங்குகிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற புராதானச் சிறப்பு வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பெயரை மாற்றக்கூடாது என்ற முடிவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்படி தான் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்புத் தளத்தின் நுழைவாயில் உள்ள முகப்புக் கட்டுமான நுழைவு வளைவு, அப்படியே மாற்றமில்லாமல் தோற்றம் கொடுக்கு வகையில் பராமரிக்கப்பட்ட வந்தது.


சிதையும் பழமை:


சேலத்துக்கு வருகின்ற சினிமா ஆர்வலர்களும், திரைப்படத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களும் இதர துறைச் சார்ந்த பிரமுகர்களும் மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடிச் செல்வது  வழக்கம். அதன்படி தான் அடியேனும் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர் முகப்பு வளைவைப் பார்க்கச் சென்றேன். அந்தப் படத்தைத் தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன். 




கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகப்பை நான் பார்த்தபோது, எந்தவிதத் திணிப்புகளும் இல்லாமல் பழமைத்தன்மையின் மெருகு குலையாமல் அப்படியே இருந்தது. இப்போதோ அந்த முகப்பு வளைவில் புதிதாக 'வர்மா' என்ற சொல்லின் ஆங்கில வரிவடிவில்  'VARMA' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைத் தன்மையுள்ள நினைவுச் சின்னத்தின் சிதைவுக்கு வழிகோலும் வகையில் அமைந்திருக்கும் இந்த புதிய புகுத்தல் குறித்துத் தொல்லியலாளர்கள் மட்டுமல்ல, திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களும் எண்ணி வருந்தத்தக்கது. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுப்பதன் மூலமாக, வர்மா என்ற அந்த எழுத்துக்களை நீக்க வைக்க வேண்டும். 


மாடர்ன் தியேட்டர்ஸ்  1935 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்ததன் நினைவுச் சின்னத்தை, அதன் பாரம்பரியப் பெருமையை உடைத்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை சேலம் பொதுமக்களுக்கும், திரைத் துறையினருக்கும், அகில இந்திய அளவில் புகழ் பெற்று விளங்கும் சினிமா துறையினருக்கும் உண்டு. 


கட்டுரையாளர்:  ஆர் நூருல்லா


மேலும் படிக்க: TR Sundaram Birthday: தமிழில் முதல் கலர் திரைப்படம்..! மலையாளத்தில் முதல் பேசும் படம்..! தமிழில் முதல் ஹாலிவுட் கலைஞர்கள்...! - யார் இந்த டி.ஆர்.சுந்தரம்?