தமிழ் சினிமா நடிகர்களில் விஜய் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டவர் என நடிகர் இமான் அண்ணாச்சி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னாளில் காமெடியில் வட்டார வழக்கு மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர் இமான் அண்ணாச்சி. இவர் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ஆதித்யா சேனலில் கல்லூரி மாணவர்களிடம் கேள்வி - பதில் கொண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். 


இப்படியான நிலையில் இமான் அண்ணாச்சி நடித்து மே 10 ஆம் தேதி உயிர் தமிழுக்கு என்ற படம் வெளியாகவுள்ளது. அமீர் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், முக்கியமான கேரக்டரில் இவர் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இமான் அண்ணாச்சியிடம், “நீங்கள் நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்களே..எந்த நடிகருடன் நடிச்ச அனுபவம் இப்ப வரைக்கும் உங்களுக்கு ஃபேவரைட் ஆக இருக்கிறது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இமான் அண்னாச்சி, ‘எல்லா நடிகர்களுடனும் நடித்த அனுபவம் ஃபேவரைட் ஆகவே உள்ளது. ஆனால் விஜய் என்னை ரொம்ப நன்றாக கவனித்துக் கொண்டார். பொதுவாக அவர் ரொம்ப அமைதியானவர். யாரிடமும் பேச மாட்டார். வந்தால் காட்சிகளில் நடிப்பார், மானிட்டரில் பார்ப்பார், கேரவனுக்கு சென்று விடுவார். வேறு யாரிடமும் பெரிய அளவில் பேச மாட்டார். 


வேட்டைக்காரன் படத்தில் நடிக்கும்போது நான் நடிப்பதை ஆச்சரியப்பட்டு பார்த்தார். அன்றைக்கு அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் நான் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்கிறேன் என சொல்லலாம். அந்த படத்தில் மண்டபத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். சுமார் 250 பேருக்கும் மேலாக அங்கிருந்தார்கள். நடித்து முடித்த பின் எங்க எல்லாரையும் தாண்டி போகும்போது என்னை ஒரு பார்வை பார்த்தார். அப்போது என்னிடம், ‘அண்ணா.. இதற்கு முன்னாடி வேறு எந்த படத்துலேயாவது நடிச்சிருக்கீங்களா?’ என கேட்டார். 


நான் ஒரு கம்பெனி ஆர்டிஸ்ட். அவர் வந்து என்னிடம் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றபோது அந்த சந்திப்பு நடந்தது. நான் அவர் கேட்ட கேள்விக்கு, ‘இல்லை சார். இப்போது தான் முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன்’ என சொன்னேன். நல்லா வருவீங்க அண்ணா என அன்றைக்கு விஜய் சொன்னார் என்று இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.