இசையமைப்பாளர் இளையராஜா அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.


இதனிடையே கடந்த ஜூலை 6 ஆம் தேதி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்த இளையராஜா என்ற மேதை தனது படைப்புகள் மூலம் பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து இவ்வளவு தூரம் அவரை நியமன எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 


ஆனால் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா  சென்றிருந்த நிலையில் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இளையராஜா  என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி என கூறியிருந்தார். 


இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நாளான நேற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவர்களுக்கு மாநிலங்களவையின் சபாநாயகரான குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவை பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக வெங்கையா நாயுடு பெயர் சொல்லி அழைத்தார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இளையராஜாவில் பதவியேற்பு விழாவுக்கு வர இயலவில்லை. 


இந்நிலையில் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி ஆகிய 4 பாஜக எம்.எல்.ஏ.க்களும், இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே செல்வமணி, சினிமா இசைக்கலைஞர்கள் சங்கம், மற்றும் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் விரைவில் டெல்லி சென்று நியமன எம்.பி.யாக இளையராஜா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண