தொடரும் இளையராஜா சர்ச்சை


அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதற்காக பல படங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கூலி படத்தில் தனது இசையைப் பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை அனைத்தும் தனக்கே சொந்தமானவை என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மற்றுமொரு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இளையராஜா


மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்


மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். உண்மைக் கதையை மையப்படுத்தி சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.


இப்படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா இசையில் கமலின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாடலுக்கு ஒரு புது அர்த்தம் மஞ்சும்மல் பாய்ஸ் கொடுத்தது என்று சொல்லலாம். இன்ஸ்டாகிராம் , ஃபேஸ்புக் , ட்விட்டர் என எங்கே திரும்பினாலும் ' உண்டான காயமென்றும் ' ' மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல' என்று சலிக்க சலிக்க காதுகளில் ஒலித்தது இப்பாடல். திரையரங்கம் , ஓடிடி என மாறி மாறி வெளுத்து வாங்கிய மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இப்போது தான் உண்மையான சோதனை.






தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கண்மணி அன்போடு பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாடலை பயன்படுத்தியதற்கான இழப்பீடு தரவேண்டும் என்று இளையராஜா வலியுறுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்தப் பாடலை நீக்கிவிட்டால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் உயிரே போனது போல் ஆகிவிடுமே என்பது அவர்களின் வருத்தமாக உள்ளது. சிலர் இளையராஜாவின் மேல் தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.