சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து தெரிவித்துள்ள சர்ச்சை கருத்தால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
சக்தி மானாக கையை மேலே உயர்த்தி பம்பரமாய் சுழலும் முகேஷ் கண்ணாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சக்திமான் தொடருக்கு வயது வித்தியாசமில்லாமல் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே சக்திமான் சீரியலை படமாக சமீபத்தில் சோனி நிறுவனம் முடிவு செய்தது. கொரோனா ஊரடங்கில் இந்த தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் டிஆர்பியில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளியதால் இதனை படமாக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே முகேஷ் கண்ணா தனது யூடியூப் சேனலான பீஷ்ம் இன்டர்நேஷனலில் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அந்த வீடியோ இப்படிப்பட்ட பெண்கள் உங்களையும் கவர்ந்திழுப்பார்களா? என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவில் ஆண்களிடம் தாமாகவே வந்து உடலுறவு வைத்துக் கொள்ள கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல என்றும், அவர்கள் வணிக நோக்கத்திற்காக அதனை கேட்பதாக கூறியுள்ளார். ஏனென்றால் இது போன்ற வெட்கக்கேடான விஷயங்களை எந்த நாகரீக பெண்ணும் சொல்ல மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாட்ஸ்அப்பில் தனக்கும் இதுபோன்ற செய்திகள் வருவதாகக் கூறிய முகேஷ் இதுபோன்ற பெண்கள் உண்மையில் இருந்தால் அந்த சமூகம் நிச்சயம் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் கூறியுள்ளார். அதேபோல் தனது இளமை காலத்தில் பெண்கள் இதுபோன்ற நிலைமை ஏற்படும் போது பெண்கள் வேண்டாம் என மறுக்கும் நிலை இருந்தது. தற்போது ஆண்கள் வேண்டாம் சொல்லும் அளவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பலரும் முகேஷ் கண்ணாவை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
முகேஷ் கண்ணாவுக்கு இதுபோன்ற சம்பவங்கள் புதுசு இல்லை. முன்னதாக 2020 ஆம் ஆண்டு Me Too பிரச்சனை எழுந்த போது பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும்போது பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து பிரச்சனையில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.