அரசியலுக்கு நான் இன்னும் தயாராகவில்லை; இருமுறை ராஜ்யசபா சீட்டை வேண்டாம் என நிராகரித்தேன் என்று பாலிவுட் பிரபலம் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததாக அண்மையில் அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இது அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்தது.இந்நிலையில், ஐடி ரெய்டு குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு நீண்ட பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது:

Continues below advertisement

அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்துவிட்டேன். அவர்கள் கேட்ட விவரங்களை தெரிவித்துவிட்டேன். என்னிட கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்தேன். நான் எனது பங்கைச் செய்தேன். அவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்தனர். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனது கடமையல்லவா. ரெய்டு முடிந்த பின்னரும் கூட சில ஆவணங்களை அவ்வப்போது கேட்கின்றனர். அதையும் அளித்துவருகிறேன். இந்த உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் யார் எனது தொண்டு நிறுவனத்துக்கு அளித்த பணமாக இருந்தாலும், ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வேண்டும் அல்லவா? நான் எந்த ஒரு விதிமுறையையும் மீறவில்லை.

ரூ.20 கோடி பெறப்பட்ட நிலையில், ரூ.1.9 கோடி மட்டுமே தொண்டுகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சோனு சூட், இது ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் தொண்டு நிறுவனத்தாக பெற்றுள்ள பணம் அத்தனையுமே பொதுமக்களால் நண்கொடையாக அளிக்கப்பட்டது அல்ல. இதில் ஒரு குறிப்பிட்ட தொகை சில முன்னணி பிராண்டுகள் எனக்களித்த சம்பளத்துடன் அளித்தது. நான் விளம்பரப் படங்களில் நடிக்கும்போது சம்பளத்துடன் கேட்டுப் பெற்ற தானம் அது.

மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் நான் உதவி கோரியோரும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனது மெயிலில் 54,000 அஞ்சல்கள் திறக்கப்பட்டாமல் உள்ளன. வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் என எல்லாவற்றிலும் உதவி கோரி குறுந்தகவல்கள் உள்ளன. ரூ.18 கோடியை செலவழிக்க 18 நிமிடங்கள் போதும். ஆனால் ஒவ்வொரு ரூபாயும் உண்மையிலேயே தேவையுள்ளவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என நினைக்கிறேன். அதேபோல் ஒரே ஒரு ரூபாய் கூட எனது சொந்த தேவைக்காக நான் பயன்படுத்தவில்லை. இவ்வாறு தொலைக்காட்சிப் பேட்டியில் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சோனு சூட் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து டெல்லி கல்வித்துறை விளம்பரத் தூதராக செயல்படுவதாலேயே இந்த ரெய்டு நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை எனத் தெளிவுபடுத்துகிறேன். நான் எல்லா மாநிலங்களுடனும் இணைந்து செய்வேன். நான் இன்னும் அரசியலுக்குத் தயாராகவில்லை. ராஜ்யசபா உறுப்பினராக எனக்கு இரண்டு முறை இரு வேறு கட்சிகளிடமிருந்து வாய்ப்பு வந்தது. நான் இப்போது இருக்கும் பணியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எப்போது அரசியலுக்குத் தயாராகிறேனோ அப்போது மொட்டை மாடியில் நின்று நான் தயார் என்று ஊருக்கு உரக்கச் சொல்வேன் என்று கூறியுள்ளார். அதுவரை சினிமாவிலும் மக்கள் சேவையிலும் ஈடுபடப்போவதாகவும் கூறினார். ஐடி ரெய்டுகளால் தனது சேவை நின்று போகாது என்றும், நிறுத்துவதற்காக இதைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.