ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் இடையில் படங்கள் தயாரித்தும் வந்தார்.
தற்போது காரி என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் தன் சமீபத்திய நேர்காணலில் தனது அடையாளங்களான தாடி, சிரிப்பு குறித்து பேசியிருந்தார்.
தாடி
தாடி என்பது சசிகுமாருக்கு அடையாளமாகவே மாறி விட்டது. இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் தாடியை எடுத்துவிட்டு நடித்ததில்லை. ஆனால் நாடோடிகள் திரைப்படத்தில் ஒரே ஒரு ஷாட்டிற்காக தாடி எடுத்தார். அதுகுறித்து பேசுகையில், "ஒரே ஒரு ஷாட், அதுவும் அது என் ரெண்டாவது படம், யாருக்கும் பெருசா தெரியாதுன்னு தைரியத்துல எடுத்தது. அதுக்கு அப்புறம் தாரை தப்பட்டை படத்துல வேற வேற கெட்டப் வச்சு டெஸ்ட் பண்ணி பாத்தோம். அதுல ஒரு கெட்டப், தாடி எடுத்துட்டு, பென்சில் மீசை வச்சு, காதுல கடுக்கன் போட்டு டைரக்டர் என்ன பாண்டி பஜார்ல போயி நடடான்னு சொல்லிட்டார். யாருமே கண்டுபிடிக்கல. சமுத்திரகனிய பாக்க ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போனேன் அங்கேயும் யாருக்கும் அடையாளம் தெரியல. அவருக்கே தெரியல, என் ஆபீஸ்ல யாருக்கும் தெரியல. ஆனா அந்த கெட்டப் படத்துல வரல." என்றார்.
சிரிப்பு
சசிக்குமாருடைய சிரிப்பு எல்லா மிமிக்கிரி கலைஞர்களாலும் செய்யப்படும் ஒன்று. அதுவே அவருக்கு அடையாளமாக மாறி விட்டது. அது குறித்து பேசும்போது, "அது என் சிரிப்பே இல்ல, எங்க கூட நமோ நாராயணன்னு ஒருத்தர் அப்படிதான் சிரிப்பார். எனக்கு சிரிப்பே வராது. ஒரு ஷாட்ல வேகமா சிரிக்க சொன்னாங்க. எனக்கு வரல, அவரை சிரிக்க சொல்லி, அதே மாதிரி நானும் சிரிச்சு எடுத்தோம். அதுவே பெருசா ட்ரெண்ட் ஆகிடுச்சு. என்கூட பல நாள் ஷூட்டிங் இருந்தவங்களே எங்க சார் அந்த சிரிப்ப பாக்கவே முடிலன்னு சொல்லுவாங்க." என்று கூறினார்.
கடன் பிரச்சினை
இடையில் நிறைய படங்கள் நடிகராக நடித்ததன் காரணம் கேட்டபோது, "எல்லோருமே சினிமாவில் சில தவறுகள் செய்துவிட்டு, கடனில் சிக்கிக் கொள்வார்கள். அஜித் சார் நான் நடிக்க வரும் முன்பே ஒரு கட்டத்தில் இது போன்று நிறைய படங்களில் நடித்தார். அவர் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டார். எனக்கு ஒருநாள் சிவகுமார் சார் ஒரு அட்வைஸ் செய்தார். என் மகன்களுக்கு நான் அதைத்தான் சொல்வேன், உனக்கும் சொல்றேன், நடிகர்கள் தயாரிக்காதீர்கள், உங்களுக்குத்தான் பணம் போட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அப்புறம் ஏன் தயாரிக்கிறீர்கள். தயாரிப்பது வேறு விதமான வேலை, நடித்துக்கொண்டே அதை செய்ய முடியாதுன்னு சொன்னார். அந்த அட்வைஸ நான் இப்போ வர்றவங்களுக்கு சொல்லிட்டு இருக்கேன்." என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்