கோலிவுட்டின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோருடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று அதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவா. அதில் தயாரிப்பாளர், இயக்குநர் , இசையமைப்பாளர்களை டேக் செய்து அடுத்த படத்திற்காக இணைவது மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார்.
அனுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை SK20 என அழைக்கின்றனர். ஜாதி ரத்தாலு என்னும் தெலுங்கு திரைப்படம் மூலமாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் அனுதீப். தற்போது உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு என இருமொழிகளில் பை - லிங்குவல் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் அனுதீப் , “சிவகார்த்திகேயனை நான் எப்போதும் ஒரு நடிகராக விட மேஜிஷியனாகத்தான் பார்த்திருக்கிறேன். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை ஈர்க்கும் அவரது திறமை தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளது.
இந்த படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தாக அமையும்” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படம் இருமொழிகளில் உருவாக இருப்பதால் தற்போது தீவிரமாக தெலுங்கு கற்று வருகிறாராம் சிவகார்த்திகேயன். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம். இது தவிர பிக்பாஸ் இயக்குநர் ஒருவரின் படைப்பில் , கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.