அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல், நட்பு, சோகம் என எல்லா உணர்வுகளையும் உணர்ந்தார்கள். அது SPB எனும் மூன்று மந்திர எழுத்து. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆருக்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல் பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கியது. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் வசப்படுத்தியவர்.



மறைந்தாலும் அனைவர் மனதிலும் மறையாமல் உள்ளுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்போதும் நம் நினைவுகளில் கலந்து இருக்கிறார். "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என வெறும் எதுகை மோனைக்காக பாடவில்லை. உண்மையிலேயே இசையாக தான் நாளும் இசை ரசிகர்களின் செவிகளில் இன்பத் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி கோரோணா காரணமாக இறந்தார். அதனை தொடர்ந்து திரையுலகினர் இணைந்து நடத்திய அஞ்சலி கூட்டத்தில் பல நடிகர்கள் மற்றும் திரைக்களைஞர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் மற்றும் நடிகர் பர்த்திபனின் பேச்சு அனைவரின் மனதையும் இலகச்செய்தது.



அதில் பேசிய பார்த்திபன், "இந்த மைக் நான் என்ன பேசுகிறேன் என்பதை உங்களுக்கு கடத்தும். ஆனால் என் சோகத்தை, கண்ணீரை கடத்தாது. என்னுடைய சோகத்தை விடுங்கள், இந்த மைக்கிற்கும் ஒரு சோகமுண்டு. கிட்டத்தட்ட ஒரு 50 வருடமாக அவர் பாடலை அனைவரை விடவும் அருகில் இருந்து கேட்டு, ஒரு காதல் மனைவி போல, காதல் மனைவியை விட நெருக்கமாக வாழ்ந்திருக்கிறது. இதனுடைய சோகத்தை யார் வெளிப்படுத்த முடியும். அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை. எல்லாரும் என்ன செய்றாங்கன்னு பாக்குறேன். ராஜா சார் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று விளக்கேற்றுகிறார். நான் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுகிறேன். ரஹ்மான் சார், இனி நாம் எஸ்.பி.பி-யின், திறமையை, புகழை, பண்பை கொண்டாட வேண்டும் என்கிறார், எப்படி கொண்டாடுவது? எஸ்.பி.சரணுக்கும் எனக்கும் பெயர் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் எஸ்.பி.பி சார் மீது வைத்த அன்பு உன்னதமானது." என்று பேசியிருக்கிறார்.