நடிகர் ரித்திக் ரோஷன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை திட்டிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”.  2 முறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியானது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை இந்தி தவிர்த்து பிற நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 


இதனிடையே பிரம்மாஸ்திரா திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ. 36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முதல் நாளில் இந்தியா முழுவதும் 13 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ஆன்லைன் ஷோக்களின் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் ரூ.19.66 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 






இதனிடையே நேற்று நடந்த சிறப்பு காட்சி ஒன்றில் கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், அர்ஜுன் கபூர், ரித்திக் ரோஷன் மற்றும்  பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் ரித்திக் ரோஷன் தனது மகன்கள் ஹிருடான் மற்றும் ஹ்ரேஹான் உடன் பங்கேற்றார். படம் முடிந்து தனது குழந்தைகளுடன் தியேட்டரை விட்டு வெளியேறிய ரித்திக் ரோஷனை ரசிகர்களை சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் பாதுகாப்பைக் கடந்து ரித்திக்குடன் செல்ஃபி எடுக்கத் தொடங்கினார். ஆனால் தன் மகன்கள் காரில் ஏறியதை உறுதி செய்த அவர், அந்த ரசிகரை பார்த்து சரமாரியாக கத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.