ஹ்ரித்திக் ரோஷன்


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன்; அசத்தல் நடிப்பு, வேற லெவல் நடனம், பல விருதுகள், வானளவு சம்பளம் என கொடிகட்டி பறக்கும் கதாநாயகர் என்றே இவரை சொல்லலாம். 


ஹ்ரித்திக் ரோஷன், 1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். 2000இல் வெளிவந்த "கஹோ நா.. பியார் ஹை" திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் அளவில் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளையும் வென்று குவித்தது. அதன்பின் 2003ஆம் ஆண்டு வெளிவந்த சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமான "கோய் மில் கயா" திரைப்படம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படத்திற்காக அவர் இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.


சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதாவின் ரீமேக்காக வெளியான இந்த திரைப்படத்தில், ஹ்ரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மாபெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


ஃபைட்டர்


இந்நிலையில், ஷாருக் கான்  நடித்து பதான் , மற்றும் வார் உள்ளிட்ட பங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ஃபைட்டர். ஹ்ரித்திக் ரோஷன் , தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் க்ரூவர், அக்‌ஷய் ஓபெராய் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மம்தா ஆனந்த் ரமோன் சிப், அங்கு பாண்டே, கெவின் வாச், அஜித் அந்தாரே ஆகியவர்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.


ஃபைட்டர் டீசர்


ஃபைட்டர் படத்தின் டீசரின் தொடக்கம் முதல் இறுதிவரை விமானத்தில் பறந்துகொண்டு மட்டுமே இருக்கிறார்கள். விமானப்படை வீரர்களாக  நடித்துள்ள ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா படூகோன் சண்டை போடும் நேரம் தவிர்த்து ரொமாண்ஸிலும் கொஞ்சம் ஈடுபடுகிறார்கள். முன்னதாக பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் வழக்கத்தை விட அதிகம் கவர்ச்சிகரமாக நடித்திருந்த நிலையில் தற்போது தனக்கே சவால் விடும் வகையில் ஃபைட்டர் படத்தில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம். 






ஒரு பக்கம் பதான் திரைப்படத்தில் ஷாருக் கான், மறுபக்கம் டைகர் படத்தின் சல்மான் கான் என்று தேசப்பற்று நிரம்பி வழியும் கதைகளில் தரையில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த பக்கம் ஹ்ரித்திக் ரோஷன் ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் எல்லாம் சேர்த்து யஷ் ராஜ் ஸ்பை யுனிவர்ஸில் இணைக்கப்பட இருக்கின்றன.