மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் 3-ஆவது விருதாக பார்க்கப்படும் பத்ம விருதுகள் இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் 139 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பெற்றுக்கொண்டார்.
பத்ம பூஷன் விருது:
நடிப்பை தாண்டி கார் ரேஸில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், அஜித்துக்கு 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மொத்தம் 139 பேருக்கு பத்மபூஷன் விருதுகளை, மத்திய அரசு அறிவித்த நிலையில், இதில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
அஜித் அறிக்கை:
ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த விருது பட்டியலில் நடிகர் அஜித்குமார் பெயரும் இடம்பெற்றது. இந்த விருது குறித்து அறிவிப்பு வெளியான பின்னர், அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில்... "இதனை காண என்னுடைய தந்தை என்னுடன் இருந்திருக்க வேண்டும். நான் செய்யும் அனைத்திலும் அவரது வழிகாட்டல் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறேன். அதேபோல் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்கை நினைவு கூர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இன்று பத்மபூஷன் விருதை பெற்றுள்ள நடிகர் அஜித்துக்கு, சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில்... ஏற்கனவே அஜித்தைப் போல பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அஜித்துக்கு முன் பத்ம விருது பெற்ற பிரபலங்கள்:
அதன்படி நடிகர் அஜித்குமாருக்கு முன்பு, இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1984 ஆம் ஆண்டு பெற்றார். இவரைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றார். 2014 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் மறைந்த புரட்சி கலைஞர் விஜகாந்துக்கு கடந்த ஆண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவர் மறைந்து விட்டதால், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார். மேலும் இந்த ஆண்டு அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டு அவர் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று குடியரசு தலைவர் கைகளால் இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.