சிவாஜி கணேசன் 


இந்திய சினிமாவின் முன்னோடி நடிகர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சுமார் 288 படங்கள் வரை நடித்துள்ளார்கள். இன்று வரை ஒவ்வொரு தலைமுறை நடிகர்களும் சிவாஜி கணேசனின் நடிப்பில் இருந்து பல படிப்பினைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திரைக்கதை எழுதிய பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சிவாஜி கணேசன்.  தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சிவாஜி கணேசன். இந்தப் படத்திற்கு தான்  நடிக்க தேர்வு செய்யப்பட்ட கதையை சிவாஜி கணேசன் பழைய காணொலி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மாதம் ரூ.250 சம்பளம்


இந்தக் காணொலியில் சிவாஜி  கணேசன் “அந்தக் காலத்தில் பாவலர் பாலசுப்ரமணியம் எழுதிய பராசக்தி என்கிற நாடகத்தை நடத்தி வந்தார்கள். அந்த நாடகத்தை என்னுடைய தெய்வம் பி.ஏ.பெருமாள் அவர்களும் ஏ.வி.எம் அவர்களும் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்ததும் அந்த நாடகத்தை படமாக்கும் உரிமத்தை வாங்கிவிட்டார்கள். இந்தப் படத்தில் யாரை நடிக்க வைப்பது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


பெருமாள் முதலியார் அதில் என் பெயரையும் சேர்த்திருக்கிறார். அப்போது நான் சக்தி நாடக சபா சார்பாக விதி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு படக்குழுவில் இருந்து அழைப்பு வந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கையே விமானத்தில் தான் தொடங்கியது. என்னை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள், பின் நான் திரும்பி வந்துவிட்டேன். அதற்கு பிறகு பராசக்தி படத்தில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள். சினிமாவில் நடிப்பதற்காக ஒரு ஐந்து ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டார்கள். அப்போது என்னுடைய சம்பளம் மாதத்திற்கு ரூ.250. அப்படிதான் சினிமாவின் என்னுடைய பயணம் தொடங்கியது” என்று தெரிவித்துள்ளார். 


 






தனது முதல் படத்திலேயே பரவலான அங்கீகாரம் பெற்றார் சிவாஜி கணேசன், கருணாநிதி எழுதிய உணர்ச்சிவசமான வசனங்களை தனது நடிப்பால் மேலும் மெருகேற்றினார். இன்று வரை தன் முதல் படமான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் வெளிக்காட்டிய அசாத்திய நடிப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.