மார்கன் திரைப்பட விமர்சனம் 

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. அஜய் திஷன், சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மார்கன் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் 

கதை

படத்தின் தொடக்கத்தில் பெண் ஒருவர் ஊசி மூலம் உடலை கருக வைத்து வித்தியாசமான முறையில் கொல்லப்படுகிறார். போலீஸான விஜய் ஆண்டனியின் மகளும் இதே முறையில் மும்பையில் கொல்லப்படுகிறார். இதனால் இந்த வழக்கை விசாரிக்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார். சந்தேகத்தின் அடிப்படையில்  நீச்சல் வீரரான அஜய் திஷனை கைது செய்து விசாரிக்கிறார்கள். அஜய்க்கு மரபு வழியாகவே சித்தர்ளைப் சில சக்திகள் இருப்பது தெரியவருகிறது. அவரைக் கொண்டு இந்த கொலைகளுக்குப் பின்னுள்ள நபரை விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே மார்கன் படத்தின் கதை.

ஒரே மாதிரி நடக்கும் தொடர்ச்சியான கொலைகள். இறுதிவரை மர்மமாக வைக்கப்படும் கொலையாளி. கொலைக்கு பின்னிருக்கும் மெசேஜ் , என ஏற்கனவே பார்த்து பழகிய கதைதான் மார்கன்.  இந்த  வழக்கமான கிரைம் த்ரில்லர்  கதையில் சூப்பர் ஹ்யூமன் விஷயங்களை சேர்த்திருப்பது மார்கன் படத்தை ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றுகிறது. விஜய் ஆண்டனி  படத்தில் துணை கதாபாத்திரமாக இருந்து அஜய் திஷன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வரும் சில காமெடிகள் படம் போகும் போக்கில் வர்க் ஆகின்றன. பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு சரியாக பொருந்துகிறது. சமுத்திரகனி மாதிரியான ஒரு சிறந்த நடிகை வெறும் இரண்டே காட்சிகளில் மட்டும் நடிக்கவைத்ததை தவிர்த்திருக்கலாம். அதேபோல் மும்பை வில்லனுக்கு இஸ்லாமியர் பெயரை வைத்தது , தாராவியில் வசிப்பவர்கள் என்றாலே குற்றவாளிகள் போன்ற முதிர்ச்சியற்ற சித்தரிப்புகள் கண்டிக்கத்தக்கவை.

இளம் நடிகர் அஜய் திஷன் ஒரு தேர்ந்த நடிகராக வருவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறார்.  . ரொமான்ஸ் காட்சிகளில் சொதப்பினாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது உடன்மொழி ஒரு தனி எனர்ஜியில் உள்ளது.

த்ரில்லர் சப்ஜெட்க்ட் அதனுடன் ஒரு சூப்பர் ஹ்யூமன் காண்செப்ட் நல்ல முயற்சி தான். ஆனால் கதையின் மிக சுவாரஸ்யமான அம்சத்தை விட்டு வழக்கமான கதை சொல்லலை தேர்ந்தெடுத்தது படத்தின் மைனஸ். இறப்பவர்களைப் பார்த்து பார்வையாளர்களுக்கு எந்த அனுதாபமும் ஏற்படுவதில்லை. காட்சிகள் கதையுடனும் கதாபாத்திரங்களுடனும்  உணர்வுப்பூர்வமாக ஒன்றும் விதமாக இல்லாமல் கதையை நகர்த்த மட்டுமே அடுக்கப்பட்டிருக்கின்றன.  படத்துடன் ஒன்றும்  ஒரு புது ஐடியாவை சொல்ல முயற்சிக்கையில்  இயக்குநர்  அதற்கும் விரிவாக புகுந்து விளையாடும் சுதந்திரத்தை எடுத்திருக்கலாம்.