வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா

தரமணி , ஜெயிலர் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'இந்திரா'. சபரீஷ் நந்தா இயக்கியுள்ள இப்படத்தில் சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். JSM Movie Production மற்றும் Emperor Entertainment இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அஜ்மல் தஹ்சீன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்திரா படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் 

இந்திரா திரைப்பட விமர்சனம் 

இந்திரா படத்தை 'சைக்கொலாஜிக்கல் த்ரில்லர் அல்லது ரிவெஞ்ச் த்ரில்லர் என எப்படி வேண்டுமானால் சொல்லலாம். அதற்கேற்றபடி முதல் பாதி ஒரு கதையாகவும் இரண்டாவது பாதி முழுக்க முழுக்க வேறு ஒரு கதைக்களத்தில் பயணிக்கிறது . நாயகனான வசந்த் ரவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பணியின் போது மது அருந்தி காவல் வாகனத்தை விபத்தில் சிக்க வைத்ததற்காக அவரை பணி இடைநீக்கம் செய்றாங்க. தண்டனை காலம் முடிந்தும் மீண்டும் பணிக்கு வர ஆணை வராததால், விரக்தியில் ஹீரோ அதிகமாக குடிக்க தொடங்குகிறார். அதனால், கண் பார்வையை இழக்க நேரிடுகிறது , பின் விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதே நேரத்தில், சென்னையில் தொடர் கொலைகள்  நடக்கின்றன. கழுத்தை நெறித்து, இடது கை வெட்டப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஹீரோவின் மனைவி கயல்யும் அந்த சைக்கோ கொலையாளியால் கொலை செய்யப்படுகிறார்.இந்த வழக்கு நீண்டு செல்ல , பார்வை இழந்த நம்ம ஹீரோ தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொன்ற கொலையாளியை பிடித்து கைது செய்கிறார். பின் அந்த சைக்கோ கொலையாளிடம் விசாரணை நடத்தும் போது, எதிர்பாராத திருப்பங்கள் வெளிப்படுகின்றன. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மையக் கரு.

முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சியில் வரும் அந்த ட்விஸ்ட் சுவாரஸ்யமாக இருந்தது.  ஆனால் அதற்குப் பிறகு  எந்த பெரிய திருப்பங்களும் இல்லாமல் தட்டையாக கதை நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை மற்றும் எழுத்து இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை. படமுழுக்க நம்மை சீட் நுணியில் வைத்திருக்கிறது.  வசந்த் ரவி வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு புதுமையாக உள்ளது . மொத்தத்தில், குறைகள் இருந்தாலும் ஒருமுறை தாராளமாக பார்க்கக்கூடிய படம் இந்திரா